தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வலம் வந்து நம் மனதில் அவர்களின் நடிப்பால் கவர்த்திழுப்பர். அப்படிப்பட்ட நடிகர்களில் வில்லன் நடிகர்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. சில நடிகர்கள் ஒரு சில படங்களில் நடித்தாலும் அவர்களை போல் யாராலும் நடிக்க முடியாத அளவிற்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்திவிட்டு செல்வர்.
என்னதான் சில நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் பேர் புகழ் என வந்தாலும் தங்களது கெட்ட பழக்கத்தாலும் , கெட்ட சகவாசத்தாலும் தாங்கள் சம்பாதித்த பணம், உடல் ஆரோக்கியம், வீடு வாசல், பட வாய்ப்புகள் என எல்லாத்தையும் இழந்து கடைசியில் தங்களது உயிரையும் மாய்த்துக்கொண்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் பலருண்டு. அப்படி நடிகர் சங்கம் வாசலிலேயே செத்து மடிந்த 80-களில் சைலண்டான வில்லனாக நடித்த நடிகரை பற்றி தற்போது பார்க்கலாம்.
1991 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவின் நடிப்பில் வெளிவந்த சின்னதம்பி படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் குஷ்பூ, மனோரமா, ராதாரவி என பல பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இப்படமும்,இளையராஜாவின் இசையும் பட்டித்தொட்டியெங்கும் மாஸ் ஹிட்டானது. இப்படத்தில் குஷ்பூவின் அண்ணன்களாக மூன்று நடிகர்கள் நடித்திருப்பர். அதில் ராதாரவி மூத்த அண்ணனாகவும், மூன்றாவது அண்ணனாக நடிகர் உதயப்ரகாஷும் நடித்திருப்பர் .
1989 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான வருஷம் பதினாறு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் உதயப்ரகாஷ். அதன் பின் புது புது ராகங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவரது கேரியர் சின்னத்தம்பி படத்தில் நடித்தது மூலமாக பிரபலமானார். அதன்பின் ரஜினியின் மன்னன், உழைப்பாளி, நடிகர் பிரஷாந்தின் செந்தமிழ் செல்வன், பிரபுதேவாவின் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட 25 படங்களுக்கு மேலாக வில்லனாக நடித்தார் உதயப்ரகாஷ்.
அந்த காலத்தில் நடிகர் ரகுவரன்,ராதாரவி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல வில்லன்களின் நடிப்புக்கு மத்தியில் அமைதியாகவும், பெருமளவில் வசனங்கள் இல்லாமல், முறைத்து பார்க்கும் பார்வையிலே வில்லத்தனதனமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார் உதயப்ரகாஷ். இப்படி தமிழ் சினிமாவில் வளர்ந்து வைத்துக்கொண்டிருந்த தருவாயில் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி தான் சம்பாரித்த பணத்தை இழந்தார்.
அதுமட்டுமில்லாமல், பல படவாய்ப்புகளை இழந்த அவர் கல்லீரலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டிருந்தார். மேலும் அவரது மருத்துவ செலவிற்கு உதவியாக இயக்குனர் பி.வாசு சில பண உதவிகளை செய்துவந்தார். இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள நடிகர் சங்கத்தின் முன்பாக வந்து வாசலிலேயே தனது உயிரை விட்டார். இப்படி ஒரு திறமை வாய்ந்த நடிகரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு என்றுமே பேரிழப்பாக உள்ளது.