சமீபகாலமாகவே தமிழ் நடிகர்கள் அக்கட தேச மொழி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தளபதி விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்கள் முதல் முறையாக நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளனர்.
இவர்களில் நடிகர் தனுஷ் ஏற்கனவே பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் வெளியான அட்ராங்கி ரே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இது தவிர ஹாலிவுட்டில், தி கிரே மேன் என்ற படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

இப்படி பிசியாக வலம் வரும் தனுஷ் தெலுங்கிலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள இந்த புதிய படத்திற்கு வாத்தி என பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. தொடர்ந்து ஜனவரி 5 ஆம் தேதி முதல் வழக்கமான படப்பிடிப்பு நடைபெறும் என அறிவித்துள்ளனர். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.