20 வருடங்களுக்கு முன்பு அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கவுண்டமணி, மனிஷா கொய்ராலா, சுஜாதா, விஜயகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஏனென்றால் இந்தப் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி வந்த நிலையில் இந்த படத்தில் அதற்கான முடிவு இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. அதனாலேயே சூப்பர் ஸ்டாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.
அந்த வகையில் 20 வருடங்களுக்கு முன்பே இந்த படத்தின் ரிலீஸ் தமிழ்நாட்டையே பரபரப்பாக்கியது. அது மட்டுமின்றி சில அரசியல் கட்சிகள் இந்த படத்தில் ரஜினி புகைப்பிடிப்பது போன்று வெளியான போஸ்டர்களை பார்த்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் அவர் இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாகவும் பிரச்சனை செய்தனர்.
இதனால் படம் வெளியான தியேட்டர்களில் சில கலவரமும், திரைகளை கிழிப்பது போன்ற அசம்பாவிதமும் ஏற்பட்டது. இப்படி பல சலசலப்புகளுக்கு பின்னர் வெளியான பாபா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தத் திரைப்படம் தற்போது மீண்டும் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் புது பொலிவுடன் வெளியானது.
மேலும் ரஜினி கூட இந்த திரைப்படம் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் என்று குறிப்பிட்டிருந்தார். வரும் டிசம்பர் 12 சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் இப்போது களை கட்ட ஆரம்பித்துள்ளது.
இப்படம் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களிலும் முன்னணி திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் இப்போதே இந்த படத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. அதிலும் காலை நான்கு மணி காட்சியே ஹவுஸ் ஃபுல் ஆனது தான் ஆச்சரியம். புது படத்தை பார்ப்பது போன்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் இந்த படத்தின் டிக்கெட்டை தற்போது புக் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி இன்னும் நான் சூப்பர் ஸ்டார் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.