நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ஃபர்ஹானா. இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே பல எதிர்ப்புகளை கிளப்பிய நிலையில், படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை அளித்துள்ளனர். தற்போது இந்த படத்தை குறித்த முழு திரைக்கதை விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் இஸ்லாமிய பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த படம் இஸ்லாமியர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதா என ரசிகர்கள் சந்தேகப்பட்ட நிலையில், அதற்கெல்லாம் பதிலாகத்தான் இந்த திரைக்கதை விமர்சனம் அமைந்துள்ளது. இஸ்லாமிய பெண்ணான ஃபர்ஹானா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இதில் இவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் போது, அங்கு அவர் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
இதில் நடுத்தர குடும்ப தலைவர் ஜித்தன் ரமேஷுக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களது குடும்பம் மிகவும் பெரியது. ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு செருப்பு கடையில் வரக்கூடிய வருமானத்தை வைத்து தான் அவர்களது தேவைகளை சமாளித்து வருகின்றனர். அதிலும் ஃபர்ஹானாவின் தந்தை இஸ்லாமிய முறைப்படி கட்டுப்பாட்டுடன் இருக்கிறார். ஃபர்ஹானாவிற்கு மூன்று குழந்தைகள் இருப்பதால், குடும்பத்தில் வறுமை காரணமாக அவர் தன்னுடைய தோழி மூலம் ஒரு வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்.
ஆனால் அதற்கு குடும்பத்தில் அனுமதி வாங்க படாத பாடுபடுகிறார். பல தடைகளை உடைத்து வீட்டாரின் அனுமதியுடன் ஒரு வழியாக வேலைக்கு செல்கிறார். முதலில் வங்கி கிரெடிட் கார்டு வழங்கும் வேலைக்கு சேரும் ஃபர்ஹானா சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதற்காக நட்புலகம் என்ற முகம் தெரியாத நபரிடம் பேசும் பிரிவுக்கு மாறுகிறார்.
அப்போது கனிவான குரலில் தன் உணர்வறிந்து பேசும் மற்றொரு குரலை ஃபர்ஹானா கேட்கிறார். அந்த நபர் ஃபர்ஹானாவின் ரெகுலர் அழைப்பாக மாற ஒரு கட்டத்தில் இருவருக்கும் தனி பிணைப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு அந்த நபர் நேரில் சந்திக்கும் எண்ணத்தில் அழைக்கிறார். ஆனால் தொடர்ந்து நிகழும் ஒரு அசம்பாவித சம்பவத்தால் தன் நிலை உணர்ந்து தன் முடிவை மாற்றிக் கொண்டு, அந்த நபரை சந்திக்க மறுத்து விடுகிறார்.
அதன் பின் போனில் பேசிய நபரை ஃபர்ஹானா நேரில் சந்திக்கிறாரா? கணவர் குடும்பம் என பல சிக்கல்களுக்கு மத்தியில் வேலைக்கு வந்த பர்ஹானாவின் நிலை என்ன? என்பதுதான் இந்த படத்தின் முழு கதை. இதில் வேலைக்கு செல்லும் மனைவியை தாங்கும் கதாபாத்திரமாக ஜித்தன் ரமேஷ் நடித்து ரசிகர்களிடம் கைதட்டுகளை அள்ளி இருக்கிறார். மேலும் நெல்சன் வெங்கடேஷ் ஒரு சிறிய கதை மூலம் இஸ்லாமிய குடும்பத்தையும் அவர்கள் வாழ்வியலையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார்.
ஆனால் இந்த படத்தின் முதல் பாதியின் நீளத்தை குறைத்து இருந்தால் படம் கொஞ்சம் சலிப்பு ஏற்படாமல் இருந்திருக்கும். மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இவைகள் தான் இந்த படத்தின் மைனஸாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் செல்வராகவன் படத்தில் குறிப்பிட்ட நிமிடமே வருகிறார். அவரை காட்டிய விதம் வேறாக இருந்தாலும் அவரின் குரல் வைத்து வரும் காட்சிகள் நன்றாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் படம் இப்போது இருக்கும் சாதாரண குடும்பத்தை வைத்து எடுக்கப்பட்ட படமாக இருப்பதால் திரையில் ஒரு முறை சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங் – 2.5/5