தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த வைகைப்புயல் வடிவேலு சமீப காலமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் வீடியோ வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கவுண்டமணி செந்தில் என்று இரு ஆளுமைகள் இருக்கும்போதே தனக்கென ஒரு தனி பாதையை அமைத்து பல சூப்பர் ஹிட் காமெடிகளை கொடுத்து வந்தவர் தான் வடிவேலு. ஒரு கட்டத்தில் கவுண்டமணி செந்தில் ஆகிய இருவரையும் ஓரம்கட்டி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
வடிவேலுவின் காமெடி காட்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் அமைந்து ஏகமுக வரவேற்பை பெற்று நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு பல படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் காமெடி ஜாம்பவான் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டார். இன்னும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார்.
இப்பேர்பட்ட வடிவேலு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதற்கு அரசியல் தலையீடு தான் காரணம் என கூறி வருகின்றனர். ஆனால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லையாம். விஜயகாந்தை தாக்கிப் பேசி அரசியல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் கூட அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற படத்தில் ஹீரோவாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதன்பிறகு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பித்துவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் இளம் இயக்குனர்கள் பலரின் படங்களிலும் தன்னுடைய தலையீடுகளை அதிகமாக கொடுத்து வந்ததால் நினைத்தபடி வடிவேலுவை வைத்து படம் உருவாக முடியவில்லை என பல இயக்குனர்கள் தற்போதும் கோலிவுட் வட்டாரங்களில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
தனக்கு என்ன காட்சி வேண்டும், வேண்டாம் என்பதை வடிவேலுதான் முடிவு செய்வாராம். இதேபோல்தான் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் உருவாகி வந்ததும் அந்த படத்தின் இயக்குனர் சிம்புதேவன் கதையில் வடிவேலு பல மாற்றங்களைச் சொன்னதால் ஷங்கர் மற்றும் வடிவேலு இருவருக்கும் பஞ்சாயத்து ஏற்பட்டு படம் பாதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
