தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் இருந்தாலும், இவரை போல சினிமாவுக்காக வாழ்ந்தவர் வேறு யாரும் இல்லை என்ற சொல்லுக்கு பெயர் போனவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இரவு, பகல், தூக்கம், சாப்பாடு என எதையும் பார்க்காமல் நடிப்பு தான் நாடி, நடிப்பு தான் மூச்சு என வாழ்ந்து மறைந்தார் சிவாஜி கணேசன்.
இதனிடையே ஆரம்பத்தில் கணேசனாக இருந்த நடிகர் திலகம் எப்படி சிவாஜி கணேசனாக மாறினார் என்பதை பல வருடங்களுக்கு முன்பாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். மேலும் அவரது நடிப்பை 14 வயதிலேயே பாராட்டிய மறைந்த முன்னாள் முதலமைச்சரையும் அப்பேட்டியில் குறிப்பிட்டு நெகிழ்ந்து பேசியுள்ளார்.
பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழில் நடிகராக அறிமுகமான சிவாஜி கணேசன், தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அந்த வகையில் நடிப்பதற்கு முன்பாகவே சிலாஜி கணேசன் பல நாடக மேடைகளில் தனது திறமையை வளர்த்து வந்தவர். அந்த சமயத்தில் தான் தமிழக முன்னாள் முதல்வரும், எழுத்தாளருமான பேரறிஞர் அண்ணா, மாவீரர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இதனை நாடகமாக எடுக்கும் பொருட்டு, அப்போது கணேசனாக இருந்த நடிகர் திலகத்தை அழைத்து சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கூறியுள்ளார். மேலும் 90 பக்கங்கள் நிறைந்த வசனங்களையும் அவரிடம் கொடுத்து அண்ணா பேசிக் காட்டுமாறு கூறியுள்ளார். இதை பார்த்து தயங்கிய சிவாஜி, அண்ணா நான் சிறு பையன், என்னால் எப்படி இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என அவரிடம் கேட்டாராம்.
அதற்கு பதில் கூறிய அறிஞர் அண்ணா, உன்னால் முடியும், நீ இந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என கூறிவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் 90 பக்கங்கள் நிறைந்த வசனங்களையும் எப்படி பேச வேண்டும் என்பதை அண்ணா, சிவாஜி கணேசனிடம் நடித்துக் காட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாராம். காலையில் சிவாஜி கணேசன் அந்த 90 பக்க வசன பேப்பர்களை எடுத்துக்கொண்டு படித்தாராம்.
மாலையில் அறிஞர் அண்ணா வந்தவுடன், அவரை அமர வைத்து காலையிலிருந்து மனனம் செய்த அந்த 90 பக்க வசனங்களை ஒரே மூச்சாக அண்ணாவின் முன்பு பேசி காட்டினாராம் சிவாஜி. அவரை பார்த்து ஆச்சரியமடைந்த அண்ணா, மெய்சிலிர்த்து போனதாக சிவாஜி கணேசன் அந்த பேட்டியில் நெகிழ்ந்து கூறியுள்ளார். மேலும் அந்த 90 பக்க வசனங்களையும் மனனம் செய்ய தனக்கு 10 மணி நேரமானது என சிவாஜி கணேசன் கூறியுள்ளார்.