கண்ணை நம்பாதே உதயநிதிக்கு வெற்றியா, தோல்வியா.? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

உதயநிதி இப்போது அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சினிமாவில் இனி நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். அதனாலேயே அவர் நடித்து வெளிவராமல் இருந்த படங்கள் அனைத்தும் தற்போது ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் மாறன் இயக்கத்தில் உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

மர்ம நாவல் போன்று பல திருப்பங்களுடன் இருக்கும் இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம். கதை படி பேச்சுலராக இருக்கும் பிரசன்னாவின் வீட்டில் அவருடைய ரூம் மேட்டாக உதயநிதி தங்குகிறார். அப்போது ஒரு நாள் இரவில் தன்னுடைய காரை ஓட்டி வரும் பூமிகா விபத்துக்குள்ளாகிறார். அவரை காப்பாற்றும் உதயநிதி வீட்டில் கொண்டு போய் விடுகிறார்.

பிறகு பூமிகாவின் வற்புறுத்தல் காரணமாக அவருடைய காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வருகிறார். மறுநாள் காலையில் அந்த காரை திருப்பிக் கொடுக்க வரும்போது டிக்கியில் பூமிகா பிணமாக இருக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது, அந்த கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை பல சஸ்பென்ஸ் கலந்த காட்சிகளுடன் இப்படம் விவரிக்கிறது.

படம் முழுவதும் இறுக்கமான முகம், பதட்டம் என வலம் வரும் உதயநிதி பிரசன்னாவின் பேச்சைக் கேட்டு நடப்பது, இறுதியில் ஆக்சன் ஹீரோவாக மாறுவது என தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக படம் முழுவதும் வரும் பிரசன்னா, கனமான கேரக்டரில் நடித்திருக்கும் பூமிகா, வில்லனாக வரும் ஸ்ரீகாந்த் என அனைவரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

ஆனால் ஹீரோயின் ஆத்மிகா மட்டும் படத்தில் தேவையில்லாத ஒரு ஆணியாக இருக்கிறார். மேலும் எதிர்நீச்சல் மாரிமுத்து, சென்ட்ராயன் என பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கின்றனர். அதனாலேயே படத்தின் திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்கிறது. அதற்கு பின்னனி இசையும் ஒரு காரணம். சில இடங்களில் நம்ப முடியாத லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கதையின் சுவாரசியத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது.

ஆனால் அவ்வப்போது சில காட்சிகள் முடிவு பெறாமல் இருக்கும் உணர்வையும் கொடுக்கிறது. இதுவே பல சந்தேகங்களுக்கான கேள்வியையும் எழுப்புகிறது. இதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால் த்ரில்லர் பட பிரியர்களுக்கு கண்ணை நம்பாதே நிச்சயம் திருப்தியை கொடுக்கும். அந்த வகையில் இந்த கண்ணை நம்பாதே லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசிக்க முடிகிறது.