நடிகர் அஜித் நடிப்பில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் மெகாஹிட்டான நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் அவரது பிறந்த நாளை முன்னிட்டு மே மாதம் வெளியானது. ஆனால் இந்த அப்டேட் வந்த நாள் முதல் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை தான் இப்படம் சந்தித்து வருகிறது.
முதலில் ஏகே62 படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் திடீரென இப்படத்திலிருந்து விலக்கப்பட்டார். அவரை தொடர்ந்து பல நாட்களுக்கு பின் உதயநிதி ஸ்டாலினின் சிபாரிசால் மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று விடாமுயற்சி என்ற டைட்டிலையும் அவர் அறிவித்தார். அதன் பின்பு இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அமலாக்கத்துறையினரால் அவர்களது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் லைக்காவால் விடாமுயற்சி படத்தை தயாரிக்க முடியாத சூழல் நிலவியது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் அஜித், தனது பைக்கை எடுத்துக்கொண்டு உலகம் சுற்ற கிளம்பிவிட்டார். இப்படி எந்த பக்கம் திரும்பினாலும், பெரிய பிரச்சனைகள் விடாமுயற்சி படத்தை சுற்றி நிலவி வந்த நிலையில், ஒருகட்டத்தில் இப்படம் கைவிடப்பட போவதாக தகவல் வெளியானது.
இதற்கான காரணம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ஏற்கனவே இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு விடாமுயற்சி படத்தை தயாரிக்க தயங்கி வந்தனர். இதன் காரணமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் அஜித் நடிப்பார் என்ற செய்தியும் வெளியானது.
ஆனால் தற்போது இந்த செய்திகள் அனைத்தும் வெறும் தகவல்களே என்ற வகையில், இயக்குனர் மகிழ்திருமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தரமான ட்விட்டை அப்லோடு செய்து அஜித் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளார். அந்த பதிவில் அஜித் பைக்குடன் நிற்கும் படமும், அதனுடன் செப்டம்பர் என்ற கேப்ஷனும் போட்டு இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கும் என சூசகமாக மகிழ்திருமேனி பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும், இந்த முறையும் ஏதேனும் அக்கப்போர் நடந்து விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். எது எப்படியோ அஜித் எப்படியாவது இந்த படத்தில் நடித்து விட்டு அடுத்த வருட பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீசானால் போதும் என்ற கண்ணோட்டத்தில் மொத்த கோலிவுட்டும் காத்துக்கொண்டிருக்கிறது.