தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் எதுவும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வைத்துள்ள நடிகர்தான் ஜெயம் ரவி. வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய சிறந்த கதை தேர்வின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக மாறி விட்டார்.
இவரும் ஒரு கட்டத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறியவர் தான். அதன்பிறகு ரீ என்ட்ரி கொடுத்தவர் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
மேலும் ஜெயம் ரவியின் கதை தேர்வுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் ஸ்டைலிஷ் படமாக அமைந்ததுதான் தாம் தூம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.
மேலும் படமும் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த படத்தை ஜீவா என்ற இயக்குனர் இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்ய நாட்டில் நடந்த போது திடீரென இறந்துவிட்டார்.
இதனால் அதிர்ந்து போன படக்குழுவினர் ஜீவாவின் அசிஸ்டன்ட் டைரக்டர் மணிகண்டனை வைத்து மொத்த படத்தையும் முடித்தனர். இந்த ஜீவா தான் 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற நல்ல நல்ல படங்களை கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி ஓரளவு வெற்றியை பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக மாறியது தாம் தூம். ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் இந்த படத்திற்கு ஒரு தனியிடம் உண்டு என அவரே பல பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார். மேலும் இந்த படத்தில் ஜெயம்ரவியுடன் கங்கனா ரனாவத், ராய் லட்சுமி, ஜெயராம் போன்ற பலரும் நடித்திருந்தனர்.