பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பொதுவாகவே மிகவும் தைரியமாக பேசக்கூடியவர். தனக்கு முன்னால் எந்த கேள்வியை கேட்டாலும், அதற்கு மழுப்பாமல் தன் மனதில் பட்டதை பேசி பல சர்ச்சைகளிலும் சிக்கி கொள்பவர். அப்படிப்பட்ட நடிகை தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில், ரோட்டில் செல்லவே எனக்கு பயமாக உள்ளது எனக் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லி துவாரகா என்ற இடத்தில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு நடைபெற்றுள்ளது. 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்து அம்மாணவியின் முகத்தின் மீது ஆசிட் ஊற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து இணையத்தில் பலரும் அவர்களை தண்டிக்க வேண்டும் என செய்திகளை பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்பியுமான கௌதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்களை பொது வெளியில் தண்டிக்க வேண்டும் என பகிரங்கமாக ட்விட் செய்துள்ளார். அவரது ட்வீட்டிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் வகையில், நடிகை கங்கனா ரனாவத் தனது தங்கைக்கு நடந்த கொடுமையை கூறி, அதில் அவரது பெயரை டாக்
செய்துள்ளார்.
கங்கனா ரனாவத்தின் தங்கையான ரங்கோலி சந்தேல் என்பவர் அவரது 21 வயதில் ரோட்டில் நடந்து சென்றபோது அவர் முகத்தின் மீது ஆசிட் ஊற்றி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றார்களாம். கிட்டத்தட்ட 52 சர்ஜரிகள் அவர் முகத்தில் செய்தபோதிலும், ஒரு கண் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாம். இந்த கொடுமையை தன் கண் முன்னாலேயே கங்கனா ரணவத் பார்த்த நிலையில், அதில் இருந்து ரோட்டில் செல்லவே பயந்தாராம்.
தன் பக்கத்தில் யாராவது காரிலோ, பைக்கிலோ போனார்கள் என்றால் தன்னையே அறியாமல் முகத்தை மூடி கொள்வதாகவும், பயத்தில் நடுங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இன்று கங்கனா ரனாவத்தின் தங்கை ரங்கோலி சந்தேல் தற்போது திருமணமாகி நலமாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே என் தங்கைக்கு நடந்தது போல இன்றும் ஆசிட் வீச்சு கொடுமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும் என்றும் கௌதம் கம்பீருக்கு ஆதரவாக தான் இருப்பதாகவும் கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து பகிர்ந்துள்ளார். இவரது இந்த போஸ்ட் நாட்டையே உலுக்கிய நிலையில் அச்சிறுமியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய நபர் மீது, விரைவில் கடும் தண்டனையுடன் நடவடிக்கை எடுக்குமாறு பலரும் தெரிவித்துள்ளனர்.