தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகமாக இருக்கும் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் வெளியீடு சீராக நடைபெற்று வருகின்றன. இனிமேல் தனுஷ் நடிக்கும் படங்கள் அனைத்துமே மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஹிந்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தற்போது ஹாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அதுவும் சும்மா இல்லை, ஹாலிவுட்டில் வசூலை அள்ளி குவித்த அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை இயக்கியவர்களின் அடுத்த படத்தில் தான்.
மேலும் தனுஷ் நடிப்பில் ஏற்கனவே ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் போன்ற படங்களின் படப்பிடிப்புகள் மொத்தமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அந்த வகையில் முதலில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
ஆனால் அதற்கு முன்பே உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. அனேகமாக மே 1ஆம் தேதி வெளியாகும் என அரசல் புரசலாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கர்ணன் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து வாங்கியுள்ளது. தியேட்டரில் வெளியான அடுத்த 30 நாள் கழித்து அமேசான் தளத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு முன்னர் வெளியான மிகப்பெரிய படமான மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. போனமுறை ஏமாந்த தியேட்டர் உரிமையாளர்கள் இந்த முறை உசாராக இருக்கிறார்களாம்.