தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கர்ணன். படம் பார்த்தவர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். மேலும் நட்ராஜ், லால், கௌரி கிஷன், லட்சுமி பிரியா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.
1990களில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மேல் மட்டத்தினர் கொடுமைப்படுத்துவது போலவும் சித்தரிக்கப்பட்டு படத்தை எடுத்திருந்தார் மாரி செல்வராஜ்.
இந்தப்படம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு சமர்ப்பணம் எனும் ரேஞ்சுக்கு பில்டப் செய்தனர். ஆனால் இதே போன்ற திரைப்படம் 1999ஆம் ஆண்டு வெளியான போது யாருமே அதை கண்டுகொள்ளவில்லை.
முரளி, மீனா, ரகுவரன் ஆகியோர் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இரணியன். இந்தப் படமும் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் கீழ்மட்டத்தில் இருப்பவர்களிடம் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதும், அவர்களுக்கு குடைச்சல் கொடுப்பதையும் பிரதான கதையாக வைத்து எடுத்திருந்தனர்.
அப்போது இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதே கதையைத்தான் தற்போது கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து பிரச்சினையை மட்டும் மாற்றி அப்படியே எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். எது எப்படியோ படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன பிறகு வரும் கருத்துக்களுக்கு மதிப்பில்லை தானே.
