லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படம் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான லோகேஷ் கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் ஸ்கிரிப்டை பார்த்து பார்த்து தயார் செய்து வந்தார். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் மூலம் வெற்றி அடைந்த இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து இருக்கிறது.
அதனாலேயே இப்படத்திற்கு இப்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது வாரிசு படத்தை முடித்துள்ள விஜய் அடுத்த வாரத்தில் தளபதி 67 பட அறிவிப்பு டீசருக்கான ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதை என்ன என்று தெரியவந்துள்ளது. அதாவது ஹாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற படத்தின் கதையை தான் லோகேஷ் விஜய்யை வைத்து எடுக்க இருக்கிறாராம்.
டேவிட் க்ரோனேன்பெர்க் இயக்கத்தில் விகோ மார்டென்சன், மரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. கதைப்படி மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஹீரோ ஒரு சிறிய ஹோட்டல் வைத்து நடத்தி வருவார். அப்போது ஒரு நாள் அந்த ஹோட்டலுக்கு வரும் சிலர் அங்கு வேலை பார்க்கும் பெண்ணை கொலை செய்ய முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக ஹீரோ அந்த திருடர்களை கொன்று விடுவார்.
இந்த சம்பவத்தால் ஓவர் நைட்டில் ட்ரெண்டாகும் ஹீரோவை தேடி சில பழைய நண்பர்கள் வருவார்கள். அப்போது அவர்கள் ஹீரோவின் மறுபக்கத்தை கூறுவார்கள். அதாவது ஹீரோ இதற்கு முன்பு ஒரு கேங்ஸ்டராக இருந்திருப்பார். ஆனால் அதை முற்றிலுமாக மறுக்கும் ஹீரோ தன்னை ஒரு சாதாரண மனிதனாக காட்டிக் கொள்வார். உண்மையில் அவருடைய மறுபக்கம் சற்று பயங்கரமானது தான்.
ஒரு கட்டத்தில் அவரை தேடி வரும் வில்லன்களை அழிக்க நினைக்கும் ஹீரோ மீண்டும் கேங்ஸ்டர் ஆக மாறுவார். அதன் பிறகு அவர் தன் குடும்பத்தினருடன் சாதாரண வாழ்வை வாழ்ந்தாரா, இல்லையா என்பதுதான் மீதி கதை. இதேபோன்று கதை அம்சம் கொண்ட பல திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். அவ்வளவு ஏன் விஜய்யின் தெறி படம் கூட இந்த சாயலை கொண்டதுதான்.
ஆனால் லோகேஷ் இந்த கதையை தன்னுடைய பாணியில் எடுக்க இருக்கிறாராம். ஏற்கனவே அவருடைய படங்கள் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட படங்களாக தான் இருக்கும். அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் கதை ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இருப்பினும் இந்த கதையை லோகேஷ் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய் ரசிகர்கள் தளபதி 67 படத்திற்காக மரண வெய்ட்டிங்கில் இருக்கின்றனர்.