Mangalavaaram OTT Release: எப்போதுமே அமானுஷ்யமும் பயமும் நிறைந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக கிடைக்கும். அப்படி ஒரு கதை அம்சத்துடன் கடந்த மாதம் வெளிவந்த படம் தான் மங்களவாரம். தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியானது.
அஜய் பூபதி இயக்கத்தில் பாயல் ராஜ்புட், நந்திதா ஸ்வேதா, அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். மகாலட்சுமிபுரம் என்ற ஊரில் செவ்வாய்க்கிழமை ஒரு மரணம் நடக்கிறது. ஆணும் பெண்ணும் மர்மமான முறையில் இறந்து போகின்றனர். அப்போது அங்கு இருக்கும் சுவரில் அவர்கள் இருவருக்கும் தவறான தொடர்பு இருந்ததாக எழுதப்பட்டிருக்கிறது.
அதை அடுத்து மறுவாரம் வரும் செவ்வாய்க்கிழமையிலும் இதே போன்று ஒரு ஜோடி இறந்து கிடக்கின்றனர். இப்படி ஒவ்வொரு வாரமும் நடக்கும் மர்ம மரணங்களை பற்றி விசாரிக்க போலீஸ் அதிகாரியான நந்திதா ஊருக்குள் வருகிறார். ஆனால் அவருடைய விசாரணைக்கு பல தடைகள் வருகிறது.
இது எதற்கு? தொடர் மரணங்களுக்கான காரணம் என்ன? நந்திதா தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பது தான் படத்தின் ட்விஸ்ட் கலந்த கிளைமேக்ஸ். விறுவிறுப்பையும், திகிலையும் கொடுக்கும் இப்படம் தியேட்டர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது.
அதிலும் பல சினிமா விமர்சகர்கள் இப்படத்திற்கு நல்ல ரேட்டிங் கொடுத்திருந்தனர். அதனாலேயே இப்படத்தின் ஓடிடி ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதன்படி செவ்வாய்க்கிழமையான நாளை இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவர இருக்கிறது.
தியேட்டரில் இப்படத்தை பார்க்க தவறிய ரசிகர்கள் நாளை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். அதே போல் தியேட்டரில் பார்த்த ரசிகர்களும் மீண்டும் ஒருமுறை ஓடிடியில் பார்க்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆக மொத்தம் செவ்வாய்க்கிழமை திகிலை காண்பதற்கு ஆடியன்ஸ் இப்போதே தயாராகி விட்டனர்.