ராஜமௌலியை தூக்கி வைத்து பேசிய மணிரத்னம்.. அவர் இல்லைனா, பொன்னியின் செல்வன் இல்லையாம்

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகமெங்கும் உள்ள பல திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மேலும் இப்படத்துடன் சேர்த்து கடந்தாண்டு ரிலீசான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தையும் ஒன்றாக சில திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய அப்படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் அப்படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், பல மாநிலங்களுக்கு சென்று பொன்னியின் செல்வன் படபிடிப்பின்போது நடத்த பல சுவாரசியமான விஷயங்களை அப்படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய இயக்குனர் மணிரத்னம் அண்மையில் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலியை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. முழுக்க, முழுக்க தமிழர்களை பற்றியும், சோழர்களை பற்றியும் இந்நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில், இப்படம் தமிழ் ரசிகர்களுக்கான திரைப்படம் என்ற நிலையில், தெலுங்கில் உருவாகி, பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற பாகுபலி படத்துடன், பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி தெலுங்கு ரசிகர்களிடம் இது உங்களுக்கான படம் என தெரிவித்தார். அப்போது தமிழ் ரசிகர்கள் அவரது பேச்சை கேட்டு செம கடுப்பான நிலையில், தற்போது மணிரத்னம் ராஜமௌலி இயக்கிய பாகுபலியை தூக்கி வைத்து பேசியுள்ளது மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ராஜமௌலி மட்டும் இல்லை என்றால் இன்று தன்னால் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிற்கவே முடியாது என தெரிவித்த மணிரத்னம், ராஜமௌலி தான் பொன்னியின் செல்வன் உருவாக முக்கிய நபராக இருந்தவர் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பாகுபலி போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்கி அவர் ஹிட் கொடுத்ததால் தான், இன்று இந்தியா முழுவதும் பல பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகி வருகிறது என தெரிவித்தார்.

மணிரத்னம் பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பாகுபலி படத்தின் ட்விட்டர் பக்கத்தில், அந்த வீடியோவை பகிர்ந்து மணிரத்னத்துக்கு அப்படக்குழு நன்றியை தெரிவித்துள்ளது. மேலும் மணிரத்னம், ராஜமௌலியை புகழ்ந்தது தெலுங்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் , ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழ் படங்களை அக்கடு தேசத்து படங்களுடன் ஒப்பிடுவதா என தமிழ் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.