எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா கலந்து கொண்ட ஒரே நிகழ்ச்சி.. வெளியில தான் நாங்க எதிரி

தமிழக அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருக்கிறது. தங்களுக்கு என ஒரு ஆளுமையை கொண்டு திறமையாக ஆட்சி செய்த முதல்வர்களில் இவர்களும் ஒருவர். அதனாலேயே இவர்கள் மூவரும் மரணத்திற்கு பிறகும் பேசப்பட்டு வருகிறார்கள்.

அதில் எம் ஜி ஆரும் கலைஞரும் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே நெருங்கிய நண்பர்கள். கலைஞரின் கதை, வசனத்தில் எம்ஜிஆர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர்கள் இருவரும் தனித்தனியாக கட்சியை ஆரம்பித்து நடத்தி வந்தனர். ஆனாலும் இவர்கள் இறுதிவரை நண்பர்களாகத்தான் இருந்தார்கள்.

அதேபோன்று ஜெயலலிதாவும் எம்ஜிஆர் மூலம் அரசியலுக்கு வந்தவர்தான். சொல்லப்போனால் இவர்கள் மூவரும் வெளி உலக பார்வைக்கு எதிரியாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் நெருங்கிய நட்பு கொண்டவர்களாகவே இருந்து இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் இவர்கள் மூவரும் ஒன்றாக சந்தித்தால் அந்த இடமே அவ்வளவு கலகலப்பாக இருக்குமாம்.

அந்த வகையில் இந்த மூவரும் சேர்ந்து கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியும் இருக்கிறது. பழம்பெரும் பாடகியும், நடிகையுமான கே பி சுந்தராம்பாள் தன் பிறந்த ஊரான கொடுமுடியில் ஒரு திரையரங்கத்தை கட்டினார். அதன் திறப்பு விழாவிற்கு அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை அவர் அழைத்திருக்கிறார். கலைஞரும் அவருடைய அழைப்பிற்கு சம்மதித்திருக்கிறார்.

அதேபோன்று கேபி சுந்தராம்பாள் எம்ஜிஆரிடமும் ராமச்சந்திரா நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று அன்புடன் கேட்டு இருக்கிறார். அதன் பிறகு அவர் ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவும் உடனே வருகிறேன் என்று சம்மதித்து இருக்கிறார்.

அதன் பிறகு இந்த மூன்று பிரபலங்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றனர். அந்த வகையில் மூன்று முதல்வர்கள் ஒன்றாக இணைந்து கொண்ட ஒரே நிகழ்ச்சியாக அது இருக்கிறது. கே பி சுந்தராம்பாள் கட்டிய அந்த திரையரங்கம் கே பி எஸ் கொடுமுடி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.