நயன்தாராவின் சினிமா கேரியரை திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்றே பிரித்துக் கொள்ளலாம். ஏனென்றால் விக்னேஷ் சிவனை நயன்தாரா கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். அவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே பெரிய அளவில் ஹிட் அடித்தது.
ஆனால் திருமணத்திற்கு பின் நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போகவில்லை. இருந்தபோதிலும் மனம் தளராமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி இனி வெளியாகும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.
ஏனென்றால் நயன்தாரா இடத்திற்கு மற்ற நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வாழ்வா, சாவா என்ற நிலையில் தற்போது நயன்தாரா உள்ளதால் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள நிறைய படங்களில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
அதுவும் பாலிவுட்டில் முதல் படமே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் நயன்தாரா உள்ளாராம். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாக உள்ள இறைவன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.
மேலும் தனுசுக்கு பல ஹிட் படங்களை கொடுத்த மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நயன்தாரா புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் மாஸ் ஹிட் அடைந்த தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
இந்தப் படத்தையும் மோகன் ராஜா தான் இயக்க இருக்கிறார். தனி ஒருவன் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் நயன்தாராவின் மகிமா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிக பிடித்திருந்தது. மீண்டும் தனி ஒருவன் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.