சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்காக தற்போது பெரும் போட்டா போட்டி நடந்து வருகிறது. நடிகர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் இதை சோசியல் மீடியாவில் பரபரப்பாக்கி வருகின்றனர். ஆனால் அந்தக் காலத்திலேயே ஒரு நடிகர் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சியில் இருந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ரசிகர்களின் பேராதரவை பெற்று வலம் வந்தவரும் அந்த நடிகர் தான்.
இப்படிப்பட்ட பெருமையை பெற்றவர் தான் தியாகராஜ பாகவதர். இவர் நடிகர் என்பதையும் தாண்டி கர்நாடக சங்கீத பாடகராகவும் தன் திறமையை நிரூபித்தவர். நாடக நடிகராக இருந்த இவர் 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அவர் 15 திரைப்படங்கள் வரை நடித்து இருக்கிறார்.
அதில் அவர் நடித்த ஹரிதாஸ் என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. எப்படி என்றால் இப்படம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் ஓடியது. அந்த வகையில் மூன்று தீபாவளிகளை கடந்த படம் என்ற பெருமையையும் பெற்றது. அதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த தியாகராஜ பாகவதருக்கு கடைசி காலங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.
முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

ஏனென்றால் திரையுலகையே உலுக்கிய லட்சுமி காந்தனின் கொலை வழக்கில் என் எஸ் கிருஷ்ணன் உடன் சேர்த்து இவரும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பல போராட்டங்களுக்கிடையில் குற்றம் அற்றவர் என நிரூபித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் வெளிவந்தார். இருப்பினும் அதற்கு பின்னால் அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.
இதனால் ஆன்மீக வழியில் சென்ற தியாகராஜ பாகவதர் உடல் நலக்குறைவின் காரணமாக 49 வயதிலேயே மரணம் அடைந்தார். அந்த வகையில் இவரை போல வாழ்ந்தவரும் இல்லை வீழ்ந்தவரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது இந்த சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை. இதைத்தான் தற்போது நடிகர் பார்த்திபன் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் இருக்கிறாராம்.
அந்த வகையில் அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் புகழின் உச்சம் கண்டவர், சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர். பன்னீரை குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். இவருடைய வாழ்க்கையை படமாக்க திரைக்கதையை தயார் செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு ரசிகர்களிடம் நல்ல ஆதரவும் கிடைத்து வருகிறது. மேலும் அவருடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.