ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு காஞ்சனா 3 திரைப்படம் வெளிவந்தது. அதை தொடர்ந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் நடிப்பில் இன்று ருத்ரன் படம் வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இப்படத்திற்காக பட குழு ஏகப்பட்ட பிரமோஷன்களை செய்து வந்தனர். அது எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆனது என்பதை சிறு விமர்சனம் மூலம் இங்கு காண்போம்.
கதைப்படி நாசர், பூர்ணிமா பாக்யராஜ் இருவரும் தங்கள் மகன் லாரன்ஸ் உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்போது நாசர் தன் நண்பனுக்காக ஒரு பெரும் தொகையை கடனாக பெற்று கொடுக்கிறார். ஆனால் அவருடைய நண்பர் பணத்தை எடுத்துக்கொண்டு எஸ்கேப்பாகி விடுகிறார். நண்பனின் துரோகத்தை தாங்க முடியாத நாசர் அந்த கவலையிலேயே மரணமடைகிறார்.
இதற்கிடையில் ஐடி துறையில் வேலை செய்யும் லாரன்ஸ் ஹீரோயின், பிரியா பவானி சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அப்போது கடன் கொடுத்தவரின் நெருக்கடி காரணமாக அவர் குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார். சில வருடங்கள் கழித்து லாரன்ஸ் ஊர் திரும்பும் வேலையில் பூர்ணிமா பாக்யராஜ் மரணமடைகிறார்.
அதை தொடர்ந்து ப்ரியா பவானி சங்கரும் காணாமல் போகிறார். இதற்கு பின்னணியில் சரத்குமார் தான் இருக்கிறார் என்பதை கண்டறியும் லாரன்ஸ் எப்படி தன் மனைவியை கண்டுபிடிக்கிறார், எதற்காக சரத்குமார் இதை எல்லாம் செய்கிறார் என்பதுதான் ருத்ரன் படத்தின் கதை. வழக்கமாக தமிழ் சினிமாவில் நாம் பார்த்து பழகிய பழிவாங்கும் கதை தான் இப்படம்.
அதனாலேயே பல இடங்களில் அடுத்தது இதுதான் நடக்கும் என்பதை ரசிகர்களால் சுலபமாக யூகிக்க முடிகிறது. அதேபோல் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு ஆக்சன் காட்சிகளும் மிக நீளமாக இருக்கிறது. மற்றபடி முதல் பாதியில் இருக்கும் தொய்வு இரண்டாம் பாதியில் கிடையாது. அந்த வகையில் காதல், சென்டிமென்ட், ஆக்சன் என எல்லாவற்றிலும் கலக்கும் லாரன்ஸ் இப்படத்திலும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். ஆனால் பல இடங்களில் காஞ்சனா திரைப்படம் பார்ப்பதை போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.
அதை தொடர்ந்து வில்லனாக வரும் சரத்குமாரும் மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார். எதற்காக அவர் இப்படி மாறினார் என்ற பிளாஷ் பேக் சுவாரசியமாக இருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக கதைக்கு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் பிரியா பவானி சங்கர், லாரன்ஸுக்கு சரியான ஜோடியாக இருக்கிறார். அந்த வகையில் நான்கு வருடங்களுக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் லாரன்ஸ் மாஸ்டருக்காக ருத்ரன் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.