தாய் முதல் தாரம் வரை.. ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் வாழ்வில் நிகழ்ந்த கோஇன்சிடன்ஸ்

Rajinikanth and vijayakanth: ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் இருவரும் காந்தம் போன்று ரசிகர்களை ஈர்த்தவர்கள். இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், “தான் முன்னணி நடிகர் என்ற கர்வம் இல்லாமல் எளிமையோடு மக்களோடு மக்களாக இருந்தது தான்”. அதிலும் விஜயகாந்த் ஒரு படி முன்னேறி, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவத்துடன் அணுகியதுதான் அவரை நிஜ வாழ்க்கையிலும் தலைவராக உயரச் செய்தது.

தமிழ் சினிமாவில் எதிரி இல்லாமல் எல்லோரையும் அன்போடு அரவணைத்து போகக்கூடிய விஜயகாந்த், எளிமையின் இலக்கணமாக விளங்கும் ரஜினி, இருவருக்கும் திரையிலும் திரையைத் தாண்டியும் பல ஒற்றுமைகள் இருந்தன அவை,

குழந்தை பருவத்தில் தாயின் அரவணைப்பை இழந்து சகோதரர்களின் பாசத்தில் வளர்க்கப்பட்ட இருவருமே சினிமாவிற்காக காந்த்களாக மாற்றப்பட்டனர் சிவாஜி ராவ் ரஜினிகாந்த் ஆகவும் விஜயராஜ் விஜயகாந்த் ஆகவும் மாறினர்.

ரஜினிகாந்த்திற்கு ஒரு முரட்டுக்காளை என்றால் விஜயகாந்திற்கு கோவில் காளை. ஆம் இருவரும் ஒரே மாதிரியான கதை அம்சம் கொண்ட இரு வேறு படங்களை நடித்து அதை ஹிட் அடித்தனர்.

இதுபோல ரஜினிகாந்த் அன்னை ஒரு ஆலயம், தர்மயுத்தம், நல்லவனுக்கு நல்லவன், தர்மதுரை, தாய் வீடு, புதுக்கவிதை போன்ற படங்களில் நடித்தார்.  அதேபோன்று விஜயகாந்த் அன்னை என் தெய்வம், தர்ம தேவதை, நல்லவன், ராஜதுரை, தாய்மொழி, புதுயுகம் போன்ற படங்களில் நடித்தார்.

இருவரின் வாழ்க்கை துணைவியின் பெயரும் லதா என்று முடிவது தான் ஆச்சரியத்தின்  உச்சமாகும். ஆம் ரஜினியின் மனைவியின் பெயர் லதா. விஜயகாந்தின் துணைவியாரோ பிரேமலதா.

ரஜினி மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் திரையில் ஆரோக்கியமான போட்டி தான் இருந்தது. விஜயகாந்த் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கால் பதிக்க எண்ணிய போது “விஜி ரிஸ்க் எடுக்காதீங்க” என்று அன்புடன் எச்சரிக்கவும் செய்தார் ரஜினி. சினிமாவில் ரஜினிக்கு இணையாக சாதனைகள் புரிந்ததுடன் புகழின் உச்சியில் இருக்கும் போதே  தன்னம்பிக்கையுடன் அரசியலிலும் கால் பதித்து சாதனை புரிந்தார் விஜயகாந்த் என்பதே மறுக்க முடியாத உண்மை.