இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான முதல் பாலிவுட் படம் ராஞ்சனா. இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் இப்படம் பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும் ஹிந்தியில் மிகப் பெரிய ஹிட்டானது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன் உடன், தனுஷ் ஷமிதாப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதைத்தொடர்ந்து ராஞ்சனா இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடித்து உள்ளார்.
அட்ரங்கிரே என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது அட்ரங்கிரே ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
அட்ரங்கிரே வெளியீட்டுக்கு முன்னதாக படத்தின் புரமோஷன் சம்பந்தமாக கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் கலந்து கொண்டனர். அப்போது கரண் ஜோகர், தனுஷிடம் ஒருநாள் கண்விழித்து பார்த்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனுஷ், ரஜினி சார் எப்படி நடந்து கொள்வாரோ அது போல் நடந்து கொள்வேன் என எளிமையாக பதிலளித்தார். மேலும் அவரின் எளிமை ரொம்ப பிடிக்கும், அதை பின்பற்றஆசைப்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து தனுஷ் ஹிந்தி படங்களில் அதிகம் நடிக்காதற்கு காரணத்தைக் கேட்டார். தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால் இந்தியில் அதிக படங்கள் நடிக்க முடியவில்லை. நல்ல கதையும் அதற்கான நேரமும் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என தனுஷ் பதில் அளித்தார்.