பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள யசோதா திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு பட ஐந்து மொழிகளில் வெளியாகிறது. வரும் நவம்பர் பதினொன்றாம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வாடகை தாய்க்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி கூறும் இந்த திரைப்படத்தில் சமந்தா வாடகை தாயாக நடித்துள்ளார். ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே உங்களுக்குள்ள ரெண்டு இதயம் துடிக்கிறத என்னைக்காவது பீல் பண்ணி இருக்கீங்களா, கர்ப்பமாக இருக்கும் அம்மாவால மட்டும்தான் அதை உணர முடியும் என்ற சமந்தாவின் குரலோடு ஆரம்பிக்கிறது.
அதைத் தொடர்ந்து கஷ்டப்படும் குடும்பத்தில் இருக்கும் சமந்தா வாடகை தாயாக மாறுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டராக உன்னி முகுந்தன், வாடகை தாயை பார்த்துக் கொள்பவராக வரலட்சுமி சரத்குமார் என்று இந்த ட்ரெய்லர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க சமந்தா அதிரடியாக களம் இறங்குவதும் பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் படத்தில் வரும் ஏஜென்ட் டீனா ரேஞ்சுக்கு சமந்தா ஒவ்வொருவரையும் குத்திக் கொல்வது படு மிரட்டலாக இருக்கிறது. இதுவே படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டி உள்ளது.
மேலும் இந்த படம் வாடகை தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளை வைத்து நடக்கும் பிசினஸை தெள்ளத் தெளிவாக காட்டும் என்பது தெரிகிறது. சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து வரும் சமந்தா இந்த படத்தின் மூலம் நிச்சயம் ரசிகர்களை கவர்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்டுள்ள சூர்யா, சமந்தாவிற்கும், படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.