கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற வைத்துக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் பரங்கிமலை கொலை சம்பவம் தான். காதலித்த பெண் தன்னை பிரேக் அப் செய்து கொண்டதால் விரக்தி அடைந்த இளைஞர் ரயில் முன்பு காதலியை தள்ளிவிட்டு கொலை செய்த விஷயம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சதீஷ் மற்றும் அதே ஏரியாவில் வசித்து வரும் சத்யா என்பவருக்கும் காதல் இருந்திருக்கிறது. இது ஒரு கட்டத்தில் பிரேக்கப்பில் முடிய விரக்தி அடைந்த சதீஷ் தன்னை ஏற்றுக்கொள்ள சொல்லி சத்யாவை பலமுறை தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் கடுப்பான சத்யா இந்த விஷயத்தை தன் பெற்றவர்களிடம் கூறியிருக்கிறார்.
அதை தொடர்ந்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் சதீஷ், சத்யாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறியிருக்கின்றனர். ஆனாலும் சத்யாவை மறக்க முடியாத சதீஷ் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று சதீஷ் சத்யாவை சந்திக்க பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்ட சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இப்படி ஒரு கொடூரத்தை கண் முன்னே பார்த்த பொதுமக்கள் சற்று நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். அதன் பிறகு காவல்துறை சத்யாவின் உடலை மீட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பி இருக்கிறது. விஷயம் கேள்விப்பட்ட அவருடைய குடும்பத்தினரும் பதறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்திருக்கின்றனர். மேலும் மகளின் இறப்பை தாங்க முடியாத அவருடைய தந்தை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
இதை அடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து இருக்கிறது. தற்போது இருவருடைய உடலும் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பலரையும் கவலை அடைய வைத்திருக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் அப்பா மகள் இருவரும் உயிரிழந்தது அப்பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமான சதீஷ்க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அப்பா மகள் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ட்வீட் போட்டு இருக்கிறார்.
மேலும் இந்த வழக்கை பொறுமையாக விசாரித்து பத்து வருஷத்துக்கு அப்புறம் தூக்கில போடாமல் தயவு செய்து உடனே விசாரித்து சதீஷை ரயிலில் தள்ளிவிட்டு தண்டிக்கும் படி நீதிபதிக்கு கோரிக்கையும் வைத்திருக்கிறார். இதை மக்களில் ஒருவனாக கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது.