சால்வையை தூக்கி எறிந்தது ஏன்.? விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்த சிவகுமார்

Actor Sivakumar: அண்மைக்காலமாகவே சிவகுமார் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார். ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற பொழுது அதை தட்டி விட்டு பரபரப்பை கிளப்பிய இவர் தற்போது சால்வையை தூக்கி எறிந்து புது பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்.

காரைக்குடியில் நடந்த புத்தக விழாவில் தான் இந்த சம்பவம் நடந்தது. இந்த வீடியோ படு வேகமாக வைரலானதை தொடர்ந்து சிவகுமார் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இப்படி பெரும் அக்கப்போராக மாறிய இந்த விவகாரத்தில் சிவகுமார் முன்வந்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். அது தொடர்பான வீடியோவில் சால்வை பொறுத்த முயன்ற பெரியவரையும் அருகில் வைத்துக் கொண்டு பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, இவர் என்னுடைய 50 ஆண்டு கால நண்பர். எனக்கு தம்பி மாதிரி.

எனக்கு சால்வை போட்டுக்கொள்ள பிடிக்காது என்பது இவருக்கு தெரியும். ஆனாலும் அங்கு அவர் எனக்கு சால்வை போட முயன்றார். ஏற்கனவே விழா முடிய 10 மணி ஆகிவிட்டதால் நான் ரொம்பவும் சோர்வாக இருந்தேன். மேலும் எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் கூட இவர் சால்வையுடன் நின்றது தவறு.

ஆனால் பொது இடத்தில் அதை தூக்கி எறிந்தது தப்பு தான். அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த வீடியோவில் அவர் விளக்கம் அளித்து இருந்தார். இதன் மூலம் பெரும் பரபரப்பை கிளப்பிய பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியையும் அவர் வைத்துள்ளார்.