பிரம்மாண்ட இயக்குனரான ராஜமவுலி பாகுபலி படத்தின் சாதனையை தொடர்ந்து இந்த வருடம் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரை வைத்து ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பல கோடி வசூல் சாதனை செய்த இந்த திரைப்படம் உலக அளவில் கவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பின் போது பாலிவுட் திரையுலகின் சரிவிற்கான காரணம் என்ன என்பதை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார். எப்போதுமே ஹாலிவுட் திரையுலகிற்கு இணையாக இருந்த பாலிவுட் சினிமா இந்த வருடம் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து துவண்டு போய் இருக்கிறது. அதில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இருந்தது தான் வேதனை.
அந்த வகையில் இந்த வருடம் அமீர்கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா உள்ளிட்ட சில திரைப்படங்களின் தோல்விதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இனிமேல் பாலிவுட் சினிமா அவ்வளவுதான் என்று பலரும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். இதைப் பற்றி கூறியிருக்கும் ராஜமவுலி இந்த வருடம் தென்னிந்தியா சினிமா அதிக அளவு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறது.
கே ஜி எஃப் 2, பொன்னியின் செல்வன், காந்தாரா, ஆர்ஆர்ஆர், விக்ரம் போன்ற படங்களின் மூலம் தென்னிந்திய சினிமா அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்மறையாக இருக்கும் பாலிவுட்டின் இந்த சரிவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைதான் முக்கிய காரணம். அந்த நிறுவனங்கள் ஹிந்தி சினிமாவுக்குள் நுழைய ஆரம்பித்ததும் நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோரின் சம்பளங்களும் கணிசமாக உயர ஆரம்பித்தது.
அது மட்டுமல்லாமல் படத்தின் தயாரிப்பு செலவுகளும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதை வைத்துப் பார்க்கும்போது பாக்ஸ் ஆபிஸில் கிடைத்த லாபத்தை விட படத்தின் தயாரிப்புக்கான செலவுதான் அதிகமாக இருந்தது இதுதான் சில நஷ்டங்களுக்கு காரணம் என்று ராஜமவுலி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் நாம் மனநிறைவு அடைந்து விடக்கூடாது. அப்படி இருந்தால் அடுத்த படத்திற்கான வெற்றியை நம்மால் கொடுக்க முடியாது. இதனால் நாம் ஒவ்வொரு வெற்றியை நோக்கியும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து ஒரு படத்தை கொடுக்க வேண்டும். இதைத்தான் நான் பின்பற்றி கொண்டிருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒருவகையில் ராஜமௌலியின் வெற்றிக்கான தாரக மந்திரமும் இதுதான்.