ஜெய் பீம் 2-க்கு தயாராகும் சூர்யா.. இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து லிஜோ மோல், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது.

ஆனாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். அது மட்டுமல்லாமல் பல விருதுகளை தட்டிச் சென்ற இந்த திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது ஜெய்பீம் பட குழுவினர் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு படம் சம்பந்தமான தங்கள் அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை தயாரித்து நடித்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று சூர்யாவை அணுகிய போது அவர் சந்துரு கதாபாத்திரத்தில் தானே நடிப்பதாக கூறியது மட்டுமல்லாமல் படத்திற்கான ஒவ்வொரு செலவையும் தாராளமாக செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ரசிகர்கள் சூர்யாவின் சிங்கம் திரைப்படம் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்தது போன்று இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவருமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இயக்குனர் வழக்கறிஞர் சந்துரு இதே போன்று பல வழக்குகளை திறமையாக நடத்தி இருக்கிறார்.

அதில் ஒரு வழக்கை மையப்படுத்தி ஜெய்பீம் படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் வரும் என்றும் அந்த படத்தில் சூர்யா நடிப்பார் என்றும் தெரிவித்தார். இது சூர்யாவின் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடித்து வரும் சூயா அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் படங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே இவர் நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி இயக்குனர் நாசுக்காக தெரிவித்திருப்பது ஆர்வத்தை தூண்டி உள்ளது.