இது என்னடா புது புரளியா இருக்கு.. முற்றுப்புள்ளி வைத்த பாலா-சூர்யா

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா தன்னுடைய 41வது திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற திரைப்படங்களுக்கு பிறகு சூர்யா கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து பாலாவின் இயக்கத்தில் நடிக்கிறார்.

அதனால் இந்தத் திரைப்படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவல் இருந்து வருகிறது. கீர்த்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் ஷூட்டிங் கடலோரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் சூர்யா கோபம் அடைந்து இந்த படத்தில் நடிக்க முடியாது என வெளியேறி விட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்தி தான் என்று தற்போது தெரியவந்துள்ளது. அதை தெளிவுபடுத்தும் விதமாக தற்போது இந்த படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 34 நாட்களாக கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

அந்த ஷூட்டிங் முடிந்த பிறகுதான் சூர்யா தற்போது சிறிது இடைவெளியின் காரணமாக சென்னை வந்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி ஒரு செய்தி பரவிவிட்டது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கோவாவில் மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் முடிந்த பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் 15 நாட்கள் நடைபெறும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி படப்பிடிப்பு சீராக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக சூர்யா குறித்து பரவி வந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.