அஜித் இயக்குனருடன் இணையும் சூர்யா.. பிரம்மாண்ட கதை ரெடி

இயக்குனர் சிறுத்தை சிவா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியதையடுத்து நடிகர் சூர்யா உடன் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாம்.

தல அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தவர் சிறுத்தை சிவா. அதிலும் விசுவாசம் திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

இதனிடையே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல ஒரு வெற்றியைப் பெற்று இருந்தது.

இதனிடையே தன்னுடைய அடுத்த படத்தை சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. நடிகர் சூர்யா தற்போது சூர்யா 41, வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், இப்படங்களை முடித்து விட்டு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் என்றும் வரலாறு சம்பந்தமாக இத்திரைப்படத்தின் கதை அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்றும் சிறுத்தை சிவா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களை போல் சூர்யா நடிக்கும் வரலாறு கதைக்களம் கொண்ட திரைப்படமாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சூர்யா முதன்முதலாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இணைவது மட்டுமில்லாமல், வரலாற்று திரைப்படத்திலும் முதன் முதலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.