ஜக்கம்மாவாக நடிக்க மறுத்த நடிகை.. வாய்ப்பை பயன்படுத்தி பின்னி பெடலெடுத்த அனுஷ்கா

நடிகர், நடிகைகள் சிலர் பட வாய்ப்புகளை தவறவிடுவது என்பது சகஜமான ஒன்று தான். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்த படங்கள் ஹிட்டாகவில்லை என்றால் பரவாயில்லை. அந்த படம் ஹிட்டாகி அவர்கள் நடிக்க மறுத்த கதாபாத்திரம் பேசப்பட்டுவிட்டால் அவ்வளவு தான், தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு கடைசி வரை புலம்பி வருவார்கள்.

அப்படி பிரபல மலையாள நடிகை ஒருவர், தான் தவற விட்ட பிரம்மாண்டமாக ஹிட்டான படம் குறித்து அண்மையில் பேட்டியில் பேசியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்க கூடிய படங்களை தேர்வு செய்து, தென்னிந்திய சினிமாவின் ராணியாக வலம் வரும் நடிகை தான் அனுஷ்கா ஷெட்டி. இவர் 40 வயதை கடந்த போதிலும் இவர் நடிக்கும் படங்களுக்கு மார்க்கெட் எப்போதுமே உண்டு.

அப்படி பல வெற்றி சாதனைகளை புரிந்த நடிகை அனுஷ்கா, முதன் முதலில் நடிக்க கமிட்டான படம் தான் அருந்ததி. தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படம் 2009 ஆம் ஆண்டு ரிலீசானது. ஷியாம் பிரசாத் ரெட்டி தயாரித்த இப்படத்தை இயக்குனர் கோடி ராமகிருஷ்ணன் இயக்கினார். அனுஷ்கா, சோனுசூட், மனோரமா உள்ளிட்டோர் நடித்த இப்படம் மாபெரும் ஹிட்டானது.

இப்படத்தில் அனுஷ்கா, ஜக்கம்மா மற்றும் அருந்ததி என இரு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். பழிதீர்க்க வரும் ஆத்மாவாக பசுபதி கதாபாத்திரத்தில் நடித்த சோனு சூட் அக்கதாபாத்திரத்தில் மிரள வைத்திருப்பார். அனுஷ்கா மற்றும் சோனுசூட் இருவருக்கும் பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகள் இப்படத்திற்காக கிடைத்த நிலையில், இப்படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரபல மலையாள நடிகை தவறவிட்டுள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுக்கு கதாநாயகியாக ஜோடி போட்டு நடித்தவர் தான் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் தமிழில் மாதவனுடன் இணைந்து குரு என் ஆளு, அருண் விஜய்யின் தடையரத் தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இதனிடையே முதன் முதலில் அருந்ததி படத்திற்கு மம்தா மோகனதாஸ் தான் அருந்ததியாக நடிக்க தேர்வானாராம்.

ஆனால் அவருடைய மேனேஜர் அருந்ததி படத்தின் தயாரிப்பாளர் இப்படத்தை தயாரிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விடுவார், அவரிடம் அந்த அளவு பணம் இல்லை என மம்தா மோகன்தாஸிடம் கூறியுள்ளார். இதை நம்பி அப்படத்தில் நடிக்க மறுத்த மம்தா மோகனதாஸ் சமீபத்திய பேட்டியில், தான் அருந்ததி படத்தில் நடிக்க மறுத்துவிட்டு, படம் வெளியானவுடன் மிகவும் வருத்தப்பட்டதாக புலம்பியுள்ளார்.