புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல், மக்களின் இதயக்கனி என புகழப்படும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி ராமச்சந்திரன் அவர்கள் செய்யாத சாதனைகள் இல்லை எனலாம். சினிமா முதல் அரசியல் வரை அனைத்து இடங்களிலும் கால் பதித்தவர். மக்களை நேசித்தால் மக்கள் நம்மை நேசிப்பார்கள் என்ற எம்.ஜி ஆரின் கூற்று இன்று வரை பல இல்லங்களில் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் .
அப்படி பல பேர், புகழுக்கு சொந்தமான எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்க வந்த காலக்கட்டத்தில் தொடர் வெற்றிப் படங்களில் நடித்தாலும், ஒரே மாதிரியான கதைக்களத்தில் நடிக்க விரும்பாதவர். இதன் காரணமாக சில ஆக்ஷன் படங்கள், காமெடி, காதல், செண்டிமெண்ட் என பல கலவையான படங்களையே நடித்து மக்களின் மனதில் நின்றவர்.
மேலும் சினிமாவில் பல புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்துவதில் எம்.ஜி ஆரை அடித்துக் கொள்ளவே முடியாது. கருப்பு, வெள்ளை படங்கள் மட்டும் தமிழ் சினிமாவில் இருந்த போது, முதல் கலர் படமாக எம் ஜி ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்கள் படம் வெளியானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு, முதல் ஈஸ்டமைன் கலர் படமான எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது.
இப்படி திரைப்பட தொழில் நுட்பங்களையும் தாண்டி பல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் என எம்.ஜி.ஆரின் சிபாரிசு மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அப்படி தமிழ் சினிமாவே புறக்கணித்த வேறு மொழி பேசும் நடிகையை அவரது திறமையை கண்டு எம்.ஜி.ஆர் வாய்ப்புக்கொடுத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. 1955 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திருமணம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் நடிகை சரோஜா தேவி.
இவர் எம்.ஜி ஆருடன் இணைந்து படகோட்டி, நாடோடி மன்னன், அன்பே வா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட சரோஜாதேவி ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்த போது இவரது நடை, கொஞ்சி கொஞ்சி பேசும் பேச்சு, நடிப்பு எதுவும் சரியாக இல்லை என இவரை பல இயக்குனர்கள் திட்டி நிராகரித்துள்ளனர்.
அந்த சமயத்தில் எம் ஜி ஆர், சரோஜா தேவியை பார்த்து இதுவும் ஒரு விதமான அழகுத் தான் என கூறி, எம்.ஜி.ஆர் முதன்முதலில் இயக்குநராக அறிமுகமான நாடோடி மன்னன் படத்தில் சரோஜா தேவியை நடிக்க வைத்தார். அப்படத்தை தொடர்ந்து கன்னடத்து பைங்கிளி, கண்ணழகி என இவரை தமிழ்நாட்டு மக்கள் புகழ்ந்து ரசிக்க ஆரம்பித்தனர். அன்று எம்.ஜி.ஆர் மட்டும் வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால் இன்று சரோஜா தேவி என்ற நடிகை சினிமாவிலேயே இருந்திருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.