பல வருடம் போராடி ஜெயித்த காமெடி நடிகர்.. திருப்புமுனையை ஏற்படுத்திய விஷ்ணு விஷால் படம்

பல வருடங்களாக சினிமாவில் போராடி நடித்த நடிகர் ஒருவர் இப்போது தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். தற்போது பல திரைப்படங்களிலும் இவரை நாம் கண்டு ரசிக்கிறோம். குணச்சித்திரம், காமெடி போன்ற எந்த கேரக்டர்களாக இருந்தாலும் இவர் அற்புதமாக நடித்து தள்ளி விடுவார்.

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும் இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகர் முனிஸ்காந்த் தான்.

விஷ்ணு விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படம் தான் முனீஸ் காத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்திற்கு முன்பு அவர் ஏராளமான திரைப்படங்களில் குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கிறுக்கன் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து இருப்பார். அதை தொடர்ந்து தம்பிக்கோட்டை, ஆழ்வார், காளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் இவரை யாருக்கும் தெரியாது.

பல வருடங்கள் கழித்து தான் இவருக்கான நேரம் அமைந்தது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட முனீஸ் காந்த் தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 44 வயதாகும் இவர் இளமை காலத்தில் சாதிக்க முடியாததை இப்போது சாதித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஆரம்ப காலத்தில் போராடிக் கொண்டிருந்த இவர் 40 வயதில் தான் திருமணம் செய்து கொண்டாராம். 10 வருடங்களுக்கும் மேலாக கஷ்டப்பட்டு முன்னேறிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.