மீண்டும் இணைய ஆசைப்பட்ட இயக்குனர்.. பட்ட அவமானத்தை மறக்காமல் நோஸ்கட் செய்த விஷால்

விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை அடுத்து மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்கள் அவரின் கைவசம் இருக்கிறது. அதில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை அவர் தயாரித்து நடிப்பது மட்டுமின்றி இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதேபோல் இந்த திரைப்படத்தையும் ஆரம்ப கட்டத்தில் மிஷ்கின் தான் இயக்கி வந்தார். ஆனால் இடையில் அவருக்கும் விஷாலுக்கும் நடந்த பிரச்சனையின் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதை தொடர்ந்து விஷாலே இந்த திரைப்படத்தை இயக்க ஆரம்பித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த படத்தில் இருந்து வெளியேறிய மிஷ்கின் இப்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் நான் விஷாலை தம்பி என்ற முறையில் தான் திட்டினேன். ஆனால் அவன் கோபித்துக் கொண்டான் என்று மிஸ்கின் இந்த பிரச்சனை குறித்து கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் எங்களுக்குள் வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது கூட விஷால் என்னை கூப்பிட்டால் நான் தாராளமாக அவருடன் இணைந்து பணிபுரிவேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருடைய இந்த விருப்பத்திற்கு விஷால் தற்போது அதிரடியான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, மிஷ்கின் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டார். அவரால் நான் பட்ட கஷ்டங்களை என்னால் மறக்கவே முடியாது. அதனால் நாங்கள் இருவரும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே கிடையாது. அந்த அவமானம் மீண்டும் வருவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று மிஷ்கினுக்கு நோஸ்கட் தரும் வகையில் ஒரு பதிலை கூறியிருக்கிறார்.

இதன் மூலம் அவர் இன்னும் அந்த பகையை மறக்கவில்லை என்று நன்றாக தெரிகிறது. தற்போது படு பிஸியாக இருக்கும் விஷால் சமீபத்தில் தளபதி 67ல் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை கூட மறுத்தது விட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்த திரைப்படம் தற்போது பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.