தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இருக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் இவர்கள் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இதனாலேயே இவர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதன் காரணமாகவே இவர்களின் சம்பளமும் கோடிக்கணக்கில் உயர்ந்துள்ளது. இவர்கள் மட்டும் கிடையாது தற்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஹீரோக்கள், இயக்குனர்கள் கூட தங்களின் சம்பளத்தை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளனர்.
இது தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்துள்ளது. அதனால் தெலுங்கு திரையுலகில் தற்போது ஒரு புரட்சியை ஏற்பட்டுள்ளது. அதாவது இனிமேல் ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குனர்கள் ஆகியோர்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளத்தை தவிர வேறு எதற்கும் செலவு செய்ய மாட்டார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏனென்றால் நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுடைய உதவியாளர்களுக்கு தேவையான சம்பளத்தை கொடுப்பது, ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவது, தங்குவது என்று மொத்த செலவையும் தயாரிப்பாளர் தலையில் கட்டி விடுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் வெளிநாடு ஷூட்டிங் சென்றால் கூட அவர்களுக்கான டிக்கெட் செலவு உள்ளிட்ட அனைத்து செலவும் தயாரிப்பாளர்களை விழி பிதுங்க செய்து விடுகிறது. மேலும் சிலர் எங்கு சென்றாலும் பாடிகாட் வைத்துக் கொண்டு செல்கின்றனர். அதற்கும் தயாரிப்பாளர்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டுமாம்.
இவ்வளவு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. திரைக்கதையில் தலையிடும் உரிமை கூட அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் வேதனை. அதனால்தான் தெலுங்கு திரை உலகம் இப்படி ஒரு புரட்சியை நடத்தியுள்ளது.
கூடிய விரைவில் இது தமிழ் சினிமாவுக்கு வரவேண்டும் என்பதுதான் இங்குள்ள தயாரிப்பாளர்களின் ஆதங்கம். ஏனென்றால் இங்கும் கூட சில நடிகைகளின் அட்டகாசம் இவ்வாறு தான் இருக்கிறது.