சக்சஸ் மீட் கொண்டாடிய முதல் தமிழ் படம்.. 60களிலேயே ஆரம்பித்து வைத்த எம்ஜிஆர்

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் கடந்து விட்டாலே அது வெற்றிப்படம் என்று சக்சஸ் மீட் கொண்டாடி வருகின்றனர். படத்தின் வசூல் நிலவரம் சரியாக தெரியாத நிலையில் கூட அது வெற்றிப்படம் தான் என்று ஒரு பார்ட்டியை வைத்து பலரையும் நம்ப வைத்து விடுகின்றனர்.

மேலும் படம் தோல்வி அடையும் நிலையில் இருந்தாலும் கூட அதை வித்தியாசமாக புரமோஷன் பண்ணியாவது ஓட வைத்து விடுகின்றனர். ஆனால் அந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்திற்கு முதல் முறையாக சக்சஸ் மீட் வைத்து கொண்டாடியிருக்கிறார்கள்.

1958 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்து இருந்த திரைப்படம் தான் நாடோடி மன்னன். அதுவரை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த எம்ஜிஆர் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து பிஎஸ் வீரப்பா, எம் என் நம்பியார், சரோஜாதேவி, பானுமதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது. ரசிகர்கள் பலரும் இந்தப் படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். குறைந்த முதலீட்டில் மிகப்பெரிய அளவில் லாபம் பெற்ற திரைப்படமாகவும் இது இருந்தது.

ஒரு தயாரிப்பாளராக மிகப்பெரிய அளவில் லாபத்தை பெற்ற எம்ஜிஆர் இந்த பட வெற்றியை கொண்டாட நினைத்தார். அதன் அடிப்படையில் அவர் திரையுலகில் தனக்கு நெருக்கமாக இருந்த அனைவரையும் கூப்பிட்டு விருந்து வைத்து இதை கொண்டாடி மகிழ்ந்தார்.

அந்த வகையில் இந்த திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் முதன்முதலாக சக்சஸ் மீட் கொண்டாடிய திரைப்படமாக இருக்கிறது. அதன் பிறகு தான் ஒவ்வொரு பட விழாவின் வெற்றியும் இது போன்று கொண்டாடப்பட்டு தற்போது ஒரு ஃபேஷனாக மாறி இருக்கிறது. இதற்கு ஒரு முன்னோடியாக எம்ஜிஆர் இருந்திருக்கிறார்.