காமெடியனாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய சந்தானம் இப்போது ஹீரோ என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார். ஆனால் காமெடியனாக அவருக்கு கிடைத்த வரவேற்பு ஹீரோ சந்தானத்திற்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் விடாமல் அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவரை வைத்து படம் எடுத்த சீரியல் நடிகை ஒருவர் அந்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயின், வில்லி என அனைத்து கேரக்டர்களிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் தான் நீலிமா ராணி. சிறு வயதிலிருந்தே நடித்து வரும் இவர் சில சீரியல்களை தயாரித்தும் இருக்கிறார்.
அப்படித்தான் சினிமாவில் தயாரிப்பாளராக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட இவர் தன் கணவரின் உதவியுடன் ஒரு படத்தை ஆரம்பித்திருக்கிறார். நகுல், சாந்தனு, சந்தானம் ஆகியோரை வைத்து ஒரு காமெடி படத்தையும் அவர் தொடங்கினார். அதைத்தொடர்ந்து நியூசிலாந்து பகுதியில் இருக்கும் பிஜி தீவில் அதற்கான ஷூட்டிங்கும் நடத்தப்பட்டிருக்கிறது.
நண்பர்களின் யோசனைப்படி தான் இவர் வெளிநாட்டில் இந்த படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். ஆனால் திட்டமிட்டபடி அவரால் முழு படத்தையும் எடுத்து முடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து கோடி வரை இதற்காக அவர் செலவு செய்திருக்கிறார். ஆனாலும் இந்த படம் குப்பை தொட்டிக்கு போனது தான் மிச்சம்.
அந்த வகையில் நீலிமா அதுவரை தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் இதற்காக செலவழித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த முயற்சி பலனளிக்காமல் போகவே தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இவரும் இவருடைய கணவரும் தவித்து போய் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கழுத்தில் இருக்கும் தாலி செயினை தவிர அவரிடம் வேறு எந்த பணமும் இல்லையாம்.
இப்படி ஒரு கஷ்டமான சூழலில் இருந்த அவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார். அதன் பிறகு அந்த வீட்டையே விலைக்கு வாங்கும் அளவுக்கு தன் உழைப்பால் உயர்ந்தும் இருக்கிறார். தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வரும் அவர் மீண்டும் தயாரிப்பு பணிகளை தொடங்கவும் ஆர்வம் காட்டி வருகிறாராம். எத்தனை தோல்விகள் வந்தாலும் மீண்டும் எழுந்து நிற்கும் இவருடைய தைரியம் தற்போது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.