இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய்யின் வீடு மற்றும் பிரசாத் ஸ்டுடியோஸ் உள்பட பல இடங்களில் செட் போட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் முடிவதற்குள் லியோ படத்தின் ஷூட்டிங்கை முழுவதுமாக முடிக்க படக்குழு தீவிரமாக உள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், கதாநாயகி த்ரிஷா, விஜய், கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக எடுத்து முடிக்கப்பட்டது. ஏற்கனவே இப்படத்தில் 6 வில்லன்கள் உள்ளனர் என கூறப்பட்ட நிலையில், மீதமுள்ள மூன்று வில்லன்கள் இப்படத்தில் அடுத்த 60 நாட்கள் கால்ஷீட்டில் இணைய உள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் நடிக்க கமிட்டான மன்சூர் அலிகான், அண்மையில் லோகேஷை பற்றி வாய்க்கு வந்தபடி வெளுத்து வாங்கியிருந்தார். அதாவது லியோ படத்தில் நடிக்க லோகேஷ் தன்னிடம் கால்ஷீட் வாங்கிய நிலையில், இப்போது வரை தன்னை கூப்பிடவே இல்லை என அவர் தெரிவித்தார். இவரது பேட்டி காட்டுத் தீயாக பரவிய நிலையில், மன்சூர் அலிகான் இப்படத்திலிருந்து விலக உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜின் விருப்பமான நடிகர் என்பதால் அவரை கட்டாயமாக இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்து வைத்தே தீருவார் என லியோ பட வட்டாரத்தில் கூறப்பட்டது. அந்த வகையில், மன்சூர் அலிகான் உட்பட மேலும் இரண்டு நடிகர்கள் லியோ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் இணைய உள்ளனர். ஆனால் அதற்குள்ளாக மற்ற நடிகர்களின் காட்சிகளை எடுத்து முடிக்க லோகேஷ் மும்முரமாக தயாராகி வருகிறார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் உட்பட நடிகர்கள் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் அடுத்த 60 நாள் கால்ஷீட்டில் நடிக்க உள்ளனர். ஆனால் நடிகர் சஞ்சய் தத்திற்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதால் அவரது கால்ஷீட் கிடைக்க சற்று தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது. நடிகர் சஞ்சய் தத் சில நாட்களுக்கு முன்பாக கே.டி தி டெவில் என்ற கன்னட திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார்.
பெங்களூரில் நடந்த இந்த படப்பிடிப்பில் அவருக்கு தோல், தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அடிப்பட்டுள்ளது. சிறிய காயத்துடனான விபத்து தான் சஞ்சய் தத்திற்கு ஏற்பட்டது என படக்குழுவினர் கூறியதையடுத்து, கூடிய விரைவில் அவர் குணமடைந்து விடுவார் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே மீதமுள்ள பாக்கி 60 நாட்களை எப்படியாவது முடித்துவிட என லோகேஷ் எண்ணியுள்ள நிலையில், சஞ்சய் தத்தின் நிலையால் லியோ படக்குழுவினர் சற்று குழம்பி போயுள்ளனர்.