காடுகளில் விளைந்த பல கோடி ரூபாய் மதிப்புமிக்க சந்தன மரங்களை அரசாங்க அனுமதியின்றி கடத்தி வெளிநாடுகளுக்கு விற்றவர் தான் வீரப்பன். 1952 ஆம் ஆண்டு கோவையில் பிறந்த இவர், கொலை, ஆள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்களை செய்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட போலீசார்களால் தேடப்பட்டவர்.
ஒரு கட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள பாப்பரப்பட்டி பகுதியில் போலீசாரால் பிடிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு என்கவுண்டரில் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். வீரப்பனின் வரலாறு சிலருக்கு ஏற்றத்தக்கதாக அமைந்தாலும், பலருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அந்த வகையில் வீரப்பனின் மகள் விஜயலக்ஷ்மி தற்போது படம் ஒன்றில் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்ட இவர், சமூக கருத்துக்களை மையமாக வைத்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கேஎன்ஆர்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மாவீரன் பிள்ளை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீசான நிலையில், இந்தாண்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு மும்முரமாக உள்ளது.
சிறப்பு தோற்றத்தில் நடிகர் ராதாரவி நடித்துள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் கேஎன்ஆர்.ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், இப்படம் குறித்து இயக்குனர் பேசினார். அதில் இப்படம் மூலமாக மதுவால் எப்படியெல்லாம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறிய அவர், எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடும் வகையில் இப்படம் உருவாகவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், மறைந்த வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த சில துயர் சம்பவங்களையும் மையமாக வைத்து இப்படத்தில் எடுத்துள்ளதாகவும் பேசினார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த விஜயலக்ஷ்மி, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும், தனது தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் அனைவருக்கும் இப்படத்தை கொண்டுப்போய் சேர்க்க உள்ளதாக நடிகை விஜயலக்ஷ்மி கூறியுள்ளார். சந்தன கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனின் மகள் நடித்துள்ள மாவீரன் பிள்ளை படத்தை பார்க்க பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.