சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஓய்வு பெற்ற ஜெயிலராக ரஜினி நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் அவருடன் இணைந்து பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து ரஜினி இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். டான் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சிபி சக்கரவர்த்தி தற்போது சூப்பர் ஸ்டாருக்காக ஒரு கதையை எழுதி இருக்கிறார்.
அந்த கதை மிகவும் பிடித்து போனதால் ரஜினி அப்படத்தில் நடித்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு வில்லனாக பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருக்கிறாராம். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர்.
இப்போதும் கூட இவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். சில வருடங்கள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அதில் வில்லன் கேரக்டரில் நடித்து இருந்த அவருக்கு ஏராளமான பாராட்டுக்கள் கிடைத்தது.
இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஸ்டைலிஷ் வில்லனை பார்த்தது கிடையாது என்று பலரும் அவரை புகழ்ந்துள்ளனர். அதை தொடர்ந்து அவர் போகன் திரைப்படத்திலும் வில்லனாக மிரட்டினார். இந்நிலையில் தான் அவருக்கு ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே இவர்கள் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.