Jailer Movie Collection: 72 வயதிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் விதமாக ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் ஒவ்வொரு நாளும் தாறுமாறான வசூலை குவித்து கொண்டிருக்கிறது. அதிலும் அக்கட தேசத்திலும் ரஜினி தனிக்காட்டு ராஜாவாக மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.
தற்போது வரை ஜெயிலர் படத்திற்கு உலக அளவில் எவ்வளவு வசூல் கிடைத்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் மட்டும் ஜெயிலர் படம் 178 கோடியை வாரி குவித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 165 கோடியையும் வசூலித்துள்ளது.
அக்கட தேசங்களான கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது புள்ளி விபரத்துடன் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஜெயிலர் படத்திற்கு 59 கோடி வசூலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒட்டுமொத்தமாக 69 கோடியும், கேரளாவில் 47 கோடியும், பிற இடங்களில் 12.45 கோடிகளும் குவித்துள்ளது.
இப்படி ஒட்டு மொத்தமாக ஜெயிலர் படத்திற்கு இதுவரை 530.45 கோடி வசூல் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலக அளவில் 500 கோடியை கடந்த நிலையில் இரண்டாவது முறையாக ஜெயிலர் படமும் 11 நாட்களில் 500 கோடியை கடந்து சாதனை புரிந்துள்ளது.
இந்த விஷயம் சாதாரணமல்ல, சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக நீயா நானா என அடித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அந்தப் பட்டம் தனக்கு மட்டுமே உரித்தானது என்பதை ஜெயிலர் படத்தின் வசூலின் மூலம் ரஜினி நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார்.
இதோடு நின்று விடாமல் இன்னும் 600 கோடி, 700 கோடி என தொடர்ந்து ஜெயிலர் படத்தின் வசூல் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே சென்று பாக்ஸ் ஆபிஸில் ஒரு கலக்கு கலக்கப்போகிறது. 72 வயதாகும் ரஜினி தன்னை விட 21 வயது குறைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை தவறாக சித்தரித்தாலும், அதெல்லாம் டெய்லர் படத்தின் வசூலை சுத்தமாகவே பாதிக்காமல் அவரை தனிக்காட்டு ராஜாவாகவே ஜெயிக்க வைத்துள்ளது.