பிரபல நடிகரை வில்லனாக களமிறக்கும் வெங்கட் பிரபு.. SJ சூர்யா அளவுக்கு நடிப்பாரா கஷ்டம்தான்

இளைஞர்களை கவரும் விதமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி சென்னை 28 என்ற தனது முதல் படத்திலேயே ஸ்கோர் செய்தவர் தான் இயக்குனர் வெங்கட்பிரபு. அதனை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களை இயக்கி இருந்தாலும் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் தான் இவருக்கான அங்கீகாரத்தை மீண்டும் பெற்று தந்தது.

பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற்ற மாநாடு படத்தின் புகழ் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு அவரது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கி விட்டார். அதன் படி ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வெங்கட் பிரபுவின் ப்ளாக்டிக்கெட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இளம் நடிகர் அசோக் செல்வன் இப்படத்தில் ஹீரோவாகவும், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் மற்றும் ரியா சுமன் என மூன்று நடிகைகள் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். மாநாடு படத்தை போலவே வித்தியாசமான காமெடி கலந்த காதல் படமாக உருவாகும் இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இசையமைக்கிறாராம்.

மாநாடு படத்தின் வெற்றியால் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால் ஏதாவது வித்தியாசமாக செய்ய முயற்சி செய்யும் வெங்கட் பிரபு மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக நடிக்க வைத்தது போல இந்த படத்தில் கயல் சந்திரனை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

கயல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்திரன் அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. சமீபகாலமாக சந்திரன் நடிப்பில் எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சந்திரன் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தில் ஹீரோ சிம்புவைவிட வில்லன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தான் வலுவான கதாபாத்திரம் இருந்தது. அதேபோல் இந்த படத்திலும் சந்திரனுக்கு ஒரு மாறுபட்ட நெகடிவ் கதாபாத்திரம் உள்ளதாம். மேலும் இப்படம் முற்றிலும் இளைஞர்களுக்கான படம் என கூறப்படுகிறது.