தமிழ் சினிமாவில் பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை வழங்கிய இயக்குனர் தான் வெற்றிமாறன். இவர் பெயரிலேயே வெற்றி இருப்பதாலோ என்னவோ தொடர் வெற்றியை சந்தித்து வருகிறார். திரையுலகில் இவரின் அசுர வளர்ச்சியைக் கண்டு வியக்காத ஆட்களே இல்லை.
தமிழ் சினிமாவை விருது மழையில் நனைய வைக்கும் வெற்றிமாறனின் சினிமா வாழ்க்கை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அவர் தனது சொந்த வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா? ஷூட்டிங்கில் படு பிசியாக இருக்கும் வெற்றிமாறன் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இதற்காக வேடந்தாங்கல் அருகேயுள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் 9 ஏக்கர் நிலம் வாங்கி பசுமை பண்ணை அமைத்துள்ளார். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் வேடந்தாங்கல் செல்லும் வெற்றிமாறன் அங்கு நடக்கும் விவசாய பணிகளை மேற்பார்வை செய்வதோடு, தானும் சில வேலைகளை ஆர்வமாக செய்து வருகிறார்.
வேடந்தாங்கலுக்கு வரும் பறவையினங்களும், பறவைகளுக்காக தீபாவளி கொண்டாட்டத்தை தியாகம் செய்யும் மக்களின் மனசும் தான் வேடந்தாங்கலில் நிலம் வாங்கியதற்கு காரணம் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.

விவசாயத்திற்கு மட்டுமல்ல விரைவில் அங்கேயே வீடு கட்டி செட்டில் ஆக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திரையுலகிலிருந்து விவசாயத்தில் கால்பதித்த நடிகர்கள் கிஷோர், பசுபதி ஆகியோர் வெற்றிமாறனின் வழிகாட்டிகள் என்பது கூடுதல் தகவல். சினிமாவில் வெற்றி பெற்ற நீங்கள் விவசாயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.