சினிமாவில் ஒரு இயக்குனரால் இரண்டு அல்லது மூன்று படங்களை தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியாக எடுக்கும் அனைத்து படங்களையும் வெற்றிப்படமாக ஒரு சில இயக்குனர்களால் மட்டுமே கொடுக்க முடியும். அவ்வாறு தனது முதல் படம் முதல் தற்போது வரை வெற்றிப்படங்கள் வழங்கிவரும் வெற்றி இயக்குனர் தான் வெற்றிமாறன்.
ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து இவரது படங்கள் வெற்றியை மட்டும் பெறாமல் பல விருதுகளையும் குவித்து வருகின்றன. இதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வெற்றி மாறன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவரது இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்கும் விடுதலை என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூரியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விடுதலை படத்தின் பணிகளை முடித்த பின்னர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “எனக்கு 13 வயது இருக்கும் பொழுது நான் சிகரெட் புகைக்க ஆரம்பித்தேன்.
பொல்லாதவன் படம் எடுக்கும் போதெல்லாம் ஒரு நாளைக்கு 150 முதல் 160 சிகரெட்டுகளை புகைப்பேன். ஆனால், நான் எப்போது சூர்யா நடித்த வாரணமாயிரம் படத்தை பார்த்தேனோ அப்போதே சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன்” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.