திருமணம் முடிந்த கையோடு வந்த பிரச்சனை.. சுமுகமாக முடித்த விக்னேஷ் சிவன்

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.

பெரும் விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகி ரசிகர்களை கவர்ந்தது.

அதைத்தொடர்ந்து புதுமண தம்பதிகள் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். முதலில் இவர்களுடைய திருமணம் திருப்பதியில் தான் நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது.

அதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் நேர்த்தி கடனை செய்வதற்காக திருப்பதிக்கு சென்றனர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் ஜோடியாக வருவதை கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கோவிலின் முன்பு திரண்டனர். மேலும் அவர்கள் இருவரையும் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்தனர்.

அப்போது நயன்தாரா காலில் செருப்பு அணிந்திருந்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. கோவில் சந்நிதானத்தில் எப்படி செருப்பு அணியலாம் என்று அவருக்கு எதிரான கருத்துக்களும் எழுந்தது. மேலும் கோவில் நிர்வாகமும் அவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.

இதனால் விக்னேஷ் சிவன் தற்போது கோவில் நிர்வாகத்திற்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, நாங்கள் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது அதனால்தான் திருமணம் முடிந்தவுடன் வீட்டிற்கு கூட செல்லாமல் நாங்கள் நேராக கோவிலுக்கு வந்தோம்.

அப்போது சுவாமி தரிசனம் முடித்து நாங்கள் வெளியேறியவுடன் பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டதால் மீண்டும் கோவிலுக்குள் வந்தோம். அப்போது நாங்கள் செருப்பு அணிந்து இருந்ததை உணரவில்லை.

தெரியாமல் நடந்த அந்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி சுவாமியை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த கடிதம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.