இசையமைப்பாளராக ஏராளமான பாடல்களை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பு பக்கம் தாவி இருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நான் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
சுமாரான வெற்றியை பெற்ற இந்த திரைப்படங்களுக்குப் பிறகு சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்தார். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பும் பேசப்பட்டது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் ஒரு நல்ல படம் கூட கொடுத்ததாக தெரியவில்லை.
ஏனென்றால் இந்த திரைப்படத்திற்கு பின் அவர் நடிப்பில் வெளிவந்த சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது.
அந்த வகையில் தற்போது இவர் கையில் கிட்டத்தட்ட ஏழு திரைப்படங்கள் இருக்கின்றது. அதில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி போன்ற திரைப்படங்கள் கடந்த வருடமே எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக அந்த திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது.
அதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி இப்போது பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள் எவ்வளவோ எடுத்து கூறியும் கூட அவர் அதை குறைப்பதற்கு மறுத்து வருகிறாராம்.
இவர் நடிப்பில் பிச்சைக்காரன் படத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் ரசிகர்களை கவரவில்லை. அப்படி இருந்தும் கூட இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகிறது. இதை காப்பாற்றிக் கொள்ளாமல் அவர் இந்த அளவுக்கு சம்பளத்தை உயர்த்தி இருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.