தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனுக்கு விஜய் நடித்த பிகில் படத்தை போட்டுக் காட்டி சிகிச்சை அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன், தன் மாமா அரவிந்த் என்பவருடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்ததில் நெற்றி, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
நெற்றியில் பலத்த காயம் இருந்ததால் அவருக்கு தையல் போடுவதற்காக மருத்துவர்கள் ஊசி போட முயன்றனர். ஆனால், ஊசியை கண்டு பயந்த சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அழுதுள்ளான். இதனால் செய்வதறியாமல் மருத்துவர்கள் தவித்தனர். அப்போது அங்கு இரவுப் பணியில் இருந்த தன்னார்வலர் ஜின்னா சிறுவனை சமாதானப்படுத்தும் முயற்சியாக உனக்கு என்ன பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிறுவன் எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும். நான் அவரின் தீவிர ரசிகன் என கூறியுள்ளான். மேலும், வலியை மறந்து விஜய் குறித்து தொடர்ந்து சிறுவன் பேசியுள்ளான்.

எனவே செல்போனில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளனர். சிறுவன் மெய்மறந்து படம் பார்க்கும் போது, மருத்துவர்கள் ஊசி போட்டு அதன் பின்னர் தையல் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். விஜய் படத்தைப் போட்டுக் காட்டி சிறுவன் ஒருவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.