மாஸ்டர், சுல்தான், கர்ணன் என தியேட்டர்காரர்கள் சந்தோசமாக இருந்த நேரத்தில் மீண்டும் கொரானாவின் தாக்கம் தலைதூக்கி உள்ளதால் தியேட்டர்கள் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது தியேட்டர்களில் சம்மர் ரிலீஸாக வெளியாக இருந்த பல படங்கள் தற்போது பல ஒடிடி தளங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் பெரிய பட்ஜெட் படங்கள் போனதுதான் ஆச்சரியம்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் உருவாகியிருந்தாலும் தியேட்டரில் தற்போது வரை எந்தப் படமும் வெளியாகவில்லை. அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 4 படங்களை ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்தாராம் விஜய் சேதுபதி.
ஆனால் தற்போது நிலவி வரும் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளதாம். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி போன்ற மூன்று நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கியுள்ளார்.

துக்ளக் தர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சன் டிவியிடமே ஓடிடி நிறுவனம் இருக்கிறது. ஆனால் என்ன காரணமாக ஹாட் ஸ்டார் பக்கம் தாவினார்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
இதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மேலும் சில படங்களும் நேரடி ஓடிடி ரிலீசாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம். ஆனால் விஜய் சேதுபதியோ, ஓடிடியாக இருந்தாலும் சரி, தியேட்டர் ரிலீஸாகஇருந்தாலும் சரி, சம்பளம் ஒன்று தானே என தன்னுடைய வேகத்தை குறைக்காமல் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.