மீண்டும் தயாரிப்பாளர் தலையில் சட்னி அரைக்கும் விஷால்.. யாருமே இல்லாத கடையில் டீ போட்டு என்ன பிரயோஜனம்

நடிகர் விஷாலை சுற்றி எப்போதுமே ஒரு சர்ச்சை அவரை விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும். அவர் எது செய்தாலும் கட்டாயம் அடுத்தவர்கள் கண்டிப்பாக மாட்டிக்கிட்டு முழிப்பார்கள். இதன் காரணமாகவே விஷாலை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் யோசித்து வருவார்கள். மேலும் அண்மைக்காலமாக விஷால் நடித்த திரைப்படங்களும் பெருந்தோல்வியை அடைந்தது.

அந்த வகையில் ஜி.வி பிரகாஷின் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அசராதவன், அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது மார்க் அண்டனி படத்தை நடிகர் விஷால் நடிப்பில் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் டைம் ட்ரேவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், இப்படத்தின் பாடல்களும் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. மினி ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இதனிடையே இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்துவதற்கு விஷாலும், இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே பெரிய அக்கப்போரே நடந்து வருகிறதாம்.

சமீப காலமாக பெரிய நடிகர்களின் படங்களின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 40000 பார்வையாளர்கள் அமரும் வகையில், இந்த ஸ்டேடியத்தின் இருக்கைகள் உள்ள நிலையில், அண்மையில் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் வாரிசு உள்ளிட்ட பல படங்களின் ஆடியோ லான்ச் வெகு விமர்சையாக நடந்துள்ளது.

அந்த வகையில் மார்க் ஆண்டனி படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை நேரு ஸ்டேடியத்தில் நடத்த வேண்டும் என விஷால் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பு நிறுவனம், அவ்வளவு பெரிய இடத்தில் நடத்தும் அளவுக்கு நம் படத்துக்கு கூட்டம் வராது என்று விஷாலிடம் கூறியுள்ளனர். அதையெல்லாம் கேட்காத விஷால், என் படத்தின் ஆடியோ லாஞ்ச் என்ன ஆனாலும் சரி அங்குதான் நடத்த வேண்டுமென அடம்பிடித்து வருகிறாராம்.

இதனால் செம காண்டான தயாரிப்பு நிறுவனம், விஷால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் சொல்வார் என முடிவெடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அதில் ஆடியோ லாஞ்ச்சை நடத்திக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டதாம். இதனிடையே வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க் ஆண்டனி படத்தின் ஆடியோ லான்ச் நேரு ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் சொன்னது போல், விஷால் ஆள் இல்லாத கடையில் டீ ஆத்த தயாராகி உள்ளார்.