இந்திய இதிகாசங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமாயணக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ராமாயணா:ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’படம் உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது.நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர்,சாய் பல்லவி,யஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.இந்நிலையில்,ராமாயணக் கதையின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த நவம்பர் 23ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா (பாலன் ஷா)இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,படங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக ராமாயணக் கதை இன்றைய இளைய தலைமுறையினரையும் உலகம் முழுவதும் உள்ள மக்களையும் சென்றடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.மேலும்,இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளிகள் ஒன்றிணைந்து இரு நாடுகளின் கலாசாரப் பாரம்பரியத்தை உலக அரங்கில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அடுத்ததாக நடைபெறவுள்ள WAVES உச்சி மாநாட்டில் நேபாளத்திலிருந்து படைப்பாளர்கள் குழுவை வரவேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம் இந்தியா – நேபாளம் இடையிலான பல நூற்றாண்டு கால கலாசார உறவுகளும் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.




