திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வரலாற்று கதாபாத்திரத்தில் ஒன்றிய 7 நடிகர்கள்.. சீனாவை அலறவிட்ட போதிதர்மர் சூர்யா

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ்சினிமாவில் இடம் பெற்ற வரலாற்று மன்னர் கதாபாத்திரங்களை காணலாம்.

எம்ஜிஆர்- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்: புரட்சி தலைவர் அவர்கள் நடித்து வெளியான கடைசி திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இந்த படத்திற்கு பிறகு அவர் முதல்வராக பதவி ஏற்றார். அதன் பிறகு இறக்கும் வரை, அவரே முதல்வராக இருந்தது வரலாறு. சோழர்களிடம் அடிமைப்பட்டு இருந்த பாண்டிய வம்சத்தை மீட்டு எடுத்த சுந்தர பாண்டிய மன்னனின் வரலாற்றை மையமாக வைத்து எடுத்த திரைப்படத்தில், இதில் பெயருக்கு ஏற்ப எம்ஜியார் அவர்கள், சுந்தரராகவே இருந்தார் என்றால் அது மிகை அல்ல

சிவாஜி கணேசன் – வீரபாண்டிய கட்டபொம்மன்: பல வரலாற்று திரைப்படங்களில் சிறப்புடன் நடித்துள்ள நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், இந்த படத்தில் செய்தது மாபெரும் புரட்சியான நடிப்பு. வெள்ளையர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை வைத்து எடுத்த இந்த படத்தில் சிவாஜி, ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜாக்சன் துறையை எதிர்த்து பேசும் சிம்மக்குரலோன் கட்டபொம்மன் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் சிவாஜி. இந்த படம் மாபெரும் ஹிட்.

மருதநாயகம் – கமல்ஹாசன்: இன்னும் வெளிவராத இந்த படத்தின் 30 நிமிட காட்சிகளை மட்டுமே எடுக்க பல கோடி ரூபாய் செலவு செய்துவிட்ட கமல் அத்துடன் இந்த படத்தை ஒத்தி வைத்துவிட்டு ஹே ராம் படத்தை எடுத்தார். இந்த படத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி, எலிசபெத் ராணி ஆகியோர் துவக்கி வைத்தனர். கதைப்படி மருதநாயகம் என்னும் பெயரில் இருந்த குறுநில தளபதி எப்படி படிகள் பல தாண்டி முஹம்மது யூசுப் கான் என்னும் கான் சாஹேப் ஆனார் என்ற வரலாற்றை மையமாக கொண்டது. இந்த படம் வெளிவந்திருந்தால் நிச்சயம் உலக அரங்கில் தமிழ் சினிமாவை தலை நிமிரச்செய்திருக்கும் என்று நம்பலாம்

ரஜினிகாந்த் – சந்திரமுகி: சந்திரமுகி படத்தில் வேட்டையன் என்னும் வில்லன் ராஜா வேடத்தில் ஆரவாரமாக நடித்திருப்பார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ஜோதிகாவின் மனதில் இடம்பெற்ற அந்த கொடுமை ராஜாவை பார்த்ததும் நமக்கே கோவம் வரும் அளவுக்கு சிறப்பாகவும், அதே நேரம் வசீகரமாகவும் நடித்திருப்பார் என்பதே உண்மை. சில நிமிடங்கள் மட்டுமே வேட்டையன் வேடத்தில் வந்தாலும் ரஜினி நடித்த ஒரே மன்னர் கதாபாத்திரம் இதுவே.

அஜித் – அசோகா: ஹிந்தி படமான அசோகா, தமிழில் அதே பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. ஷாருக்கான் அசோகராக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடி கரீனா. நம்ம அஜித் அவர்கள் இந்த படத்தில் அசோகரின் சகோதரனாக சுஷிமா என்னும் பெயரில் நடித்திருந்தார். கதைப்படி அசோகர் மீது வெறுப்பில் இருப்பவராகவும், அசோகரை கொலை செய்ய முயற்சித்தவராகவும் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியில் மாபெரும் ஹிட் அடித்தது.

சூர்யா – ஏழாம் அறிவு: குங்பூ என்னும் தற்காப்பு கலையின் தோற்றுவிப்பாளரான போதிதர்மர் என்னும் பல்லவ நாட்டு மன்னரின் வரலாற்றை ஆரம்பமாக கொண்டு இயக்கப்பட்ட படம் ஏழாம் அறிவு. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் வரும் மன்னர் கதையில் சூர்யாவின் சிறப்பான நடிப்பால் நல்லதொரு மன்னரின் வரலாற்றை தமிழர்களுக்கு அறிமுகம் செய்தனர். இந்தியாவில் இருந்து சீனா சென்று அங்கு தனது கலையை பரப்பி, அங்கேயே தெய்வமாக வழிபட்டு வரப்படுகிறார் தமிழ் மன்னர் ஒருவர் என்பது நமக்கெல்லாம் பெருமை.

சிவகார்த்திகேயன் – சீமராஜா: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சுமாரான படமான சீமராஜாவில் அவர் செய்திருந்த வரலாற்றை மன்னர் கதாபாத்திரம் விவாதப்பொருளானது என்பது உண்மை. இந்த படத்தில் அந்த மன்னர் காட்சிகள் மட்டும் ஒட்டவே இல்லை என்பதே பலரது கருத்து. மேலும் இப்படி ஒரு மன்னரின் பெருமையை புகுத்துவது போல எதற்கு காட்சிகள் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதோடு சிவகார்த்திகேயனுக்கு மன்னர் தோற்றம் பொருத்தமாக இல்லை என்பதே அநேக மக்களின் கருத்தாகும்.

மேலே சொல்லப்பட்ட படங்கள் தவிர சில படங்களும் இந்த வகையில் வரலாம். தற்போது மணிரத்னம் அவர்கள் இயக்கி வரும் பொன்னிணயின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் டீசர் வெளியாகி பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க தோற்றங்களில் நடிக்கிறார்கள். இந்த டீசர் தற்போதே பல மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. பாகுபலியை போலவே இந்த படமும் மாபெரும் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர் பார்க்கபடுகிறது.

Trending News