‘தி லெஜண்ட்’ மற்றும் ‘லீடர்’ திரைப்படங்களைத் தொடர்ந்து, தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ள மூன்றாவது திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இப்படத்தை இயக்கவுள்ளார்.
நிஜ வாழ்க்கையில் பிரபல தொழிலதிபராக இருக்கும் லெஜண்ட் சரவணனுக்குப் பொருத்தமாக, இப்படத்திற்கு ‘பிசினஸ்மேன்’ எனத் தலைப்பிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, லெஜண்ட் சரவணன் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
வழக்கம்போல் இப்படத்தையும் ‘தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமே பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. தற்போது படத்தின் நாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘தி லெஜண்ட்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த நிலையில், இந்தப் புதிய படத்திற்கும் முன்னணி இசையமைப்பாளர் ஒருவரை ஒப்பந்தம் செய்யப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.




